தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் தண்டவாளத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது. அந்த சமயம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில் சேதமடைந்த ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் டீசல் எஞ்சின் மூலம் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று இன்று இரவு 7 மணி அளவில் திருச்செந்தூரில் மழை வெள்ளத்தால் நிறுத்தப்பட்டிருந்த பாசஞ்சர் ரயிலை இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட டீசல் எஞ்சின் மூலம் மீட்டு திருநெல்வேலிக்கு சோதனை ஓட்டமாக கொண்டு வரப்பட்டது. இந்த ரயில் இரவு 9 மணிக்கு மேல் திருநெல்வேலி செல்லும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி ரயில் பாதையில் மின்சார எஞ்சின் சோதனை ஓட்டம் நடந்தது. இதற்காக மாலை 5 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து மின்சார எஞ்சின் கிளம்பியது. குரும்பூர் அருகே வந்து கொண்டிருந்த கனமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரயில் வழியிலேயே நிறுத்தம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் மழை நின்றவுடன் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டு மின்சார எஞ்சின் இயக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்திற்கு இரவு 7 மணி அளவில் வந்தடைந்தது. அதை தொடர்ந்து திருநெல்வேலி நோக்கி மின்சார ரயில் எஞ்சின் சென்றது.
நாளை பெங்களூரில் இருந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சார்பில் அதிகாரிகள் வருகை தர உள்ளதாகவும், அவர் முன்னிலையில் மீண்டும் நாளை காலை இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், அதன் பின்னர் மாலை பயணிகள் ரயில் இயக்கப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


