குரும்பூர் அருகே கோவில் பூசாரி வீட்டில் நகை, பணத்தைத் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள ராஜபதி, சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (55). இவர் ராஜபதி, கைலாசைநாதர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இவர் வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளார்.
பின்னர், இரவு வீட்டுக்கு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 9 பவுன் நகை, ரூ.30,000 பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த குரும்பூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


