தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள ஸ்ரீ அம்பாள் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 13-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்குப் பள்ளி கல்விக்குழுமத் தலைவர் வீமராஜ் தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மற்றும் பள்ளிச் செயலாளர் சுப்பாரெட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி, வாசிப்புப் பழக்கம் மற்றும் கல்வி நெறிகள் குறித்துச் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. பின்னர், மாணவ-மாணவிகளின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி நிர்வாக அதிகாரி கணேசன், பள்ளி முதல்வர் அமராவதி, ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் திரளானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகக் குழுவினரும் ஆசிரியர்களும் இணைந்து செய்திருந்தனர்.


