முற்காலத்தில் தற்போதைய சித்த மருத்துவ மனையில் தான் அரசு மருத்துவமனையாக இயங்கியது. புதர் மண்டிக் கிடந்த ஹைகிரவுண்டு பகுதியில் இறந்தவர் களின் கல்லறைகள் தான் அதிகமாய் இருந்தன அப்போது. அதைச் சீரமைத்து பெரிய மருத்துவ மனையை உருவாக்கிய பெருமை சேர்மன் மகாராஜபிள்ளை அவர் களையே சாரும்.
தற்போது இந்தியாவிலேயே அதிக அளவிலான படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ மனை என பெயர் பெற்றது பாளை அரசு மருத்துவமனை. இந்த மருத்து வமனையில் சுமார் 2400 படுக்கை வசதிகளைக் கொண்டது.
இந்தக் கல்லூரியையும், மருத்துவமனையையும் கட்டுவதற்கு காமராஜர் முடிவெடுத்து திருநெல்வேலியில் அதற்குப் பொருத்தமான இடம் தேடுகிறார்.
காமராஜரின் இந்த நோக்கத்தை அறிந்த அவரது நண்பரும், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா, பெட்டைக் குளத்தைச் சார்ந்தவருமான காதர் மீரா சாஹிப் அவர்கள் தனக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்கிறார். அந்த நிலப்பகுதியே இன்று நெல்லையில் “ஹைகிரவுண்ட்” என அழைக்கப் படுகிறது. உயரமான மைதானம் என்பதில் ஆங்கில ஆக்கமே ஹைகிரவுண்ட் ஆகும். மாவட்ட ஆட்சியர் தனவேல் அவர்கள் தூய பெயரில் போக்குவரத்து கழகங்களில் பெயர் பலகை வைக்கும் போது பாளை மேட்டுத்திடல் என இதை அழைத்தார்கள். அப்போதுதான் நெல்லை நகரம், நெல்லை சந்திப்பு, பாளை சந்தை, பாளைபேருந்து நிலையம் என பேருந்து நிறுத்தங்கள் வழங்கப்பட்டது. ஒரு காலத்தில் பாரத பிரதமர் இந்திரா காந்தி கூட இந்த மேட்டு திடலில் தான் ஹெலி காப்படரில் வந்து இறங்கினார். இந்த திடலில்தான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவ மனையும் இயங்குகிறது.
திருநெல்வேலி மாவட்ட வைத்தியசாலை கால்கோள் விழா சென்னை அரசாங்க முதல் அமைச்சர் கு. காமரா-ஜ் அவர்களால் 1958 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ம் தேதி அஸ்திவாரக்கல் நாட்டப்பட்டது. அதன் பின் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ந்தேதி இந்த ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சுகாதார அமைச்சர் எம்.ஏ.மாணிக் கவேல் தலைமை வகித்தார். இதற்கான கல்வெட்டு ஒன்று பிரதான கட்டிடத்தில் வாயிலில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் பாளையங் கோட்டை நகரசபை தலைவராக மகராஜ பிள்ளை இருந்துள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மருத்துவ மனை மிகவும் பிரமாதமாக வளர்ச்சி அடைந்தது.
மருத்துவக் கல்வித்துறை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளி நோயாளி கட்டிடம் கட்ட கால்கோள் விழா 1.09.1973 அன்று நடந்தது. நல்வாழ் வுத்துறை அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், கால் கோல் விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சண்முக சிகாமணி தலைமை தாங்கினார். இந்த கட்டிடம் கட்ட தலைமைப் பொறியாளர் அம்பு ரோஸ், மருத்துவக் கல்வித்துறை இயக்குனர் ஆர். இரத்தினக் கண்ணன், கட்டிட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், கண்காணிப்பாளர் டாக்டர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கோபாலட் தெரபி யூனிட் திறப்பு விழா 2.01.2000 அன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தனவேல் வரவேற்றார். மக்கள் நல்வாழ்வு மற்றும் மீன்துறை அமைச்சர் ஆற்காடு நா. வீராசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார்.
சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா, மேயர் உமா மகேஸ்வரி, சௌந்தர்ராஜன், பி.எச்.பாண்டியன், எஸ்.எம்.கோதர் மைதீன், இயக்குனர் அய்யாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை பொறியாளர் தங்கவேலு, முதல்வர் வி.எஸ். பாலசுப்பரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான கல்வெட்டு ஒன்று மருத்துவமனை வளாகத்தில் காணப்படுகிறது.
திருநல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 200 மாணவர்களுக்கான விரிவரை யாளர் அரங்க கட்டிடம் 52.65 லட்சங்கள் மதிப்பில் கட்டப் பட்டுள்ளது. இந்த கட்டிடம் 17.06.2007 அன்று திறக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இந்த கட்டித்தினை திறந்துவைத்தார். சட்டப்பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தார். மத்திய உள்ளதுறை இணை அமைச்சர் ராதிகாசெல்வி, விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் , சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, திருநெல்வேலி மேயர் சுப்பிரமணியன், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப் பணித்துறை அரசு செயலர் அதிசேசையா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்கான கல்வெட்டு மருத்துவ மனை வளாகத்தில் உள்ளது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் திருநெல் வேலி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையக் கட்டம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் 4.02.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டுகளும் உள்ளது.
காசநோய், மகளிர் பிரிவு, குழந்தை பிரிவு உள்பட 26 பிரிவு மருத்துவ படிப்புகள் இங்குள்ளது. மேலும் செவிலியர் பயிற்சி பள்ளியும் இங்கு உண்டு. மருத்துவ படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு தங்கும் வசதியும், மாணவர்களுக்கு தங்கும் வசதியும் இங்கு உள்ளது.
பாளை அரசு மருத்துவ மனை என்ற ஹைரவுண்ட் ஆஸ்பத்திரியில் எய்ம்ஸ் மருத்தவ மனைக்கு இணையான எய்ம்ஸ் மருத்தவமனை கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஏற்பட்டது. மல்டி ஆஸ்பத்திரி குறித்து நாம் காணலாம்.
( நதி வற்றாமல் ஓடும்)


