தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் ஒரு சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதே போல் அதன் அருகே உள்ள கொள்ளீர்குளம் கிராமத்தில் மற்றொரு சமுதாயத்துக்கு சொந்தமான கோவில் திருவிழாவும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொள்ளீர்குளம் கோவில் திருவிழாவிற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் விட்டிலாபுரம் ஊர் வழியாக கொண்டு வரப்பட்டுள்ளது.
அப்போது இருத்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு தரப்பினரும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் இரண்டு தரப்பைச் சேர்ந்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அருகில் வைக்கப்பட்டிருந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற கோப்பைகளையும் உடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


