தூத்துக்குடி சிவன் கோவில் அம்மன் சன்னதி தெருவில் உள்ள தென்புற வாயிலை பக்தர்களின் வசதிக்காக திறக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு : தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுரை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தாயார் பாகம் பிரியாள் சன்னிதானத்தின் பார்வையில் தென்புறத்தில் பெருமாள் கோவில் அருகே அம்மன் சன்னதி தெருவில் உள்ள வாசல் பல ஆண்டுகாலமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டுக்காக திறந்து இருந்தது.
இந்நிலையில் தற்போது ஒன்றரை ஆண்டுகளாக பெருமாள் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அந்த வாயிற் கதவு அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்விடத்தில் கோவிலின் அருகே சுற்றுப்புறம் சுகாதார சீர்கேடு அடைவதோடு மது பிரியர்களின் அட்டகாசமும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே பக்தர்களின் நலன் கருதி அம்மன் சன்னதி தென்புற வாயிலை திறந்து வைத்து மெயின் ரோட்டில் இருந்து அவ்வழியாக பொதுமக்களும் பக்தர்களும் கோவிலுக்கு வர வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


