மக்களின் தொடர் வலியுறுத்தலால் நான் மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறேன். வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளேன் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவருக்குக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது: “தமிழகத்தில் ஒரு வலுவான கூட்டணி அமைய நாங்கள் எடுத்த முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. கூட்டணிக்குத் தலைமை தாங்கியவர்கள் தங்களது கடமையைச் சரிவர உணர்ந்து செயல்படாததே இதற்குக் காரணம். இருப்பினும், புதிய தமிழகம் கட்சி யாரையும் நம்பி இல்லை; நாங்கள் எப்போதும் மக்களுடனேயே இருக்கிறோம்.”
தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி தனித்து 70 தொகுதிகளில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க உள்ளதாகவும், மக்கள் தங்கள் பக்கம் இருப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கூட்டணியில் இருந்திருந்தால் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், தற்போது தனித்துப் போட்டியிடுவதால் 10 முதல் 15 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களின் தொடர் வலியுறுத்தலால் நான் மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறேன். வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளேன். அங்கு எங்களது வெற்றி நிச்சயம்,” என்று உறுதியாகத் தெரிவித்தார்


