தூத்துக்குடியில் ரூ. 1000 கோடியில் அமைக்கப்பட உள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் வருகிற 7ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
தென் தமிழகத்தில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. இங்கு துறைமுகம், விமான நிலையம், ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து ஆகிய 4 வழித்தட போக்குவரத்து வசதிகளும் அமைந்து உள்ளன. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தூத்துக்குடியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழக அரசு தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறையில் ஏற்பட்ட தேக்க நிலையை போக்கி புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 1150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடி மதிப்பில் அறைகலன் பூங்கா (பர்னிச்சர் பூங்கா) அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தியாவில் கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 603 மில்லியன் டாலா் மதிப்புக்கு மரச்சாமான்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. இதில் சீனாவில் இருந்து மட்டும் 311 மில்லியன் டாலா் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. இது தவிர மலேசியா, ஜொ்மனி, இத்தாலி, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு அதிக அளவில் மரச்சாமான்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் உள்நாட்டில் மரச்சாமான்கள் உற்பத்தியை பெருக்கும் வகையில் அறைகலன் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
பர்னிச்சர் தொழிலுக்கு நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்த அறைகலன் பூங்கா அமைகிறது. மர அறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இந்த பூங்காவில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் உள்ள முன்னணி பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இங்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளன. பர்னிச்சர் உற்பத்தி, பேக்கிங், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இந்த பூங்காவில் இடம் பெறுகின்றன.
மேலும், பர்னிச்சர் தொழில் தொடர்பாக ஆண்டு தோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சிக் கூடம், பர்னிச்சர் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், வீடியோ கான்ரன்சிங் வசதி, தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்ற அனைத்து வசதிகளும் இதில் இடம் பெறுகிறது. இந்த பூங்கா மூலம் சுமார் ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் மரத்தடிகள் இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் 3-வது இடத்தில் இருக்கிறது. மியான்மர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து மரத்தடிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரத்தடிகளை கொண்டு இங்கேயே சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் கிடைக்கும் ரப்பர் மரத்தடிகள், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள யூக்கலிப்டஸ் மரங்கள், திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் உள்ள மலை வேம்பு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்கள் போன்ற மரங்களை பயன்படுத்தும் வகையிலும் இந்த அறைகலன் பூங்கா அமைக்கப்படுகிறது.
இந்த பூங்கா அமைப்பதற்காக சிப்காட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அறைகலன் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 7-ம் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.