தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் (CMFRI) நிறுவன தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி இன்று நடைபெற்றது.
இந்தியாவில் கடல் மீன்வளம் மற்றும் கடல்சார் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கில், 1947-ஆம் ஆண்டு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. இதன் தொடக்க நாளைக் கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 3-ஆம் தேதி ‘நிறுவன தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று தூத்துக்குடி மையத்தில் மாணவ-மாணவிகள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் கண்காட்சியின் முக்கிய அம்சமாக, செயற்கை முத்துக்கள் (Artificial Pearls) எவ்வாறு சிப்பிகளுக்குள் உருவாக்கப்படுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். முத்து வளர்ப்புத் தொழில்நுட்பம் மற்றும் அதில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
ஆராய்ச்சி நிலையத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் வகை மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள், அரிய வகை கடல் அட்டைகள் மற்றும் கடல் குதிரைகள், கடல் விசிறிகள், கடல் பஞ்சு மற்றும் வண்ணமயமான பவளப்பாறைகள், பல்வேறு வடிவங்களிலான கடல் சங்குகள் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
கடல் வளம் மற்றும் கடல்சார் ஆராய்ச்சிகள் குறித்து நிபுணர்கள் விளக்கியது தங்களுக்குப் புதிய அனுபவத்தைத் தந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். புத்தகங்களில் மட்டுமே படித்த கடல்வாழ் அதிசயங்களை நேரடியாகப் பார்த்தது, தங்களின் எதிர்கால கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டியுள்ளதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.


