தூத்துக்குடி அருகே அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இவர்கள் ஆட்டோவில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள், கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பழகி, இந்திய பண்பாடு, கலாசாரங்களை அறிந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த 27 பேர் 12 குழுக்களாக பிரிந்து தங்களது பயணத்தை தொடங்கி சென்னை வந்தடைந்தனர்.
அங்கிருந்து ஆட்டோ மூலம் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர். விதவிதமான வண்ணங்களில் ஆட்டோக்களை அலங்கரித்து வந்தனர்.
பின்னர் அவர்கள் தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்துக்கு வந்தடைந்தனர். அங்கு உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதற்காக அந்த பகுதியில் கரும்பு, மஞ்சள் குலை தோரணம் கட்டப்பட்டிருந்தது. பின்னர் ஆண்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, துண்டும், பெண்கள் சேலையும் அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மண் பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் அந்த வெளிநாட்டினர் கலந்து கொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
வெளிநாட்டினர் நாளை தங்களது பயணத்தை திருவனந்தபுரத்துக்கு சென்று பயணத்தை நிறைவு செய்கின்றனர்.


