4.
உயர்தட்டு மக்கள் கொட்டத்தை அடக்கிய பன்றி மாடன்.
மரண பயம் அவர்கள் இருவரையும் தொத்திக்கொண்டது. நரபலி முடிந்தவுடன் புதையல் கிடைக்கும் என இருந்தவர்கள், தற்போது நிலைகுலைந்தனர்.
கேரள மந்திரவாதி கதியே அதோ கதியென்றால் நம்ம கதி என்னவாகும்.
முத்துவும் ரங்கனும் ஓட ஆரம்பித்தனர். வேர்த்து விருவிருத்து . மூச்சு அடைத்தது. குளத்துக்கரை வழியாக ஓடினார்கள். முள்செடிகள் கண்ணுக்குதெரியவில்லை. அதில் எல்லாம் ஏறி மிதித்து ஓட ஆரம்பித்தனர். அவர்கள் உடல் முழுவதும் ரத்த கீறல் ஏற்பட்டு, ரத்த களரியானார்கள். அந்த ரணம் கூட தெரியவில்லை. உயிரை காப்பாற்ற வேண்டும். சரியாக 10 நிமிடம் ஊருக்குள் போய் விடலாம் என நினைத்து ஓடினார்கள்.
இறுதியாக ஊர் பக்கத்தில் வந்து விட்டார்கள். அவர்களை தொடர்ந்து வந்த ஆந்தை அருகில் உள்ள மரத்தில் நின்று பயங்கரமாய் ஓலமிட்டது.
நடுங்கி போய் விட்டார்கள் இருவரும்.
தொடர்ந்து எங்கிருந்தோ வந்த நாய்கள் இரண்டு இவர்களை துரத்தி கடிக்க ஆரம்பித்தது. முதலில் ஓடிய முத்து சாம்பவனுக்கு கண்ணும் தெரியவில்லை. இருட்டில் ஓடினான். அப்போது அங்கிருந்த பாழடைந்த கிணறு அவனுக்கு தென்படவில்லை. ஓட்டமாக ஓடியவன் தீடீரென்னு பூமியே பள்ளமாய் ஆனது போல மரண ஓலமிட்டப்படியே கிணற்றில் விழுந்தான். அந்த கிணற்றின் உள்ள படிக்கல்லில் இவனின் தலை மோதியது. அவனின் உயிர் கிணற்றுக்குள்ளேயே அடங்கி விட்டது.
தன் கண் எதிரிலேயே முத்து சாம்பவன் கிணற்றில் விழுந்து விட்டான்.
உடன் ஓடி வந்தவன் நிலை இப்படி ஆகி விட்டதே என ரங்கன் சாம்பவன் இனி ஓடினால் நாய்கள் விடாது என அப்படியே ஒரிடத்தில் அமர்ந்து விட்டான். “என்னை ஒண்ணும் செஞ்சிடாதீங்க. தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என்று கதறினான்.
ஆனால் இரண்டு நாய்கள் தீடீரென்று பத்துக்கு மேற்பட்ட நாய்களாக மாறியது. மறுநிமிடம் அவனை குதறி எடுத்து விட்டது. பாவம் என்ன நடந்தது ஏது நடந்தது என உலகத்துக்கு தெரியாமலேயே அந்த நான்கு ஜீவன்களும் போய் சேர்ந்துவிட்டனர். மூன்று பேர் புதையல் ஆசையில் இறந்தார்கள். ஆனால் பிச்சுமணி பாவம் . அவர் உயிர் போனது தான் மிகவும் பரிதாபம்.
பிச்சுமணி கோபம் தீரவில்லை. அவள் ஆவி ஆந்தை வடிவில் ஊருக்குள் சென்றது.
ரங்கன் வீட்டிலும் , முத்து வீட்டு முன்பு நின்றும் அலறியது. கிராமத்துக்கு மக்களே நடுங்கினர்.
*****
அதிகாலை . சூரியன் ஏதோ ஒன்றை அந்த ஊர் மக்களுக்கு சொல்ல விரைவாக எழுந்தான். சுட்டெரிக்கும் கதிருடன் மிகவும் சூடாக கிளம்பினான்.
காலையிலேயே வள்ளியம்மாள் பாட்டி எழுந்தாள். “என்ன எழவோ, என்ன நடக்க போவுதோ தெரியலை, இந்த சூரியன் இப்படி காலையிலேயே எரியுது. ராத்திரி தூங்க விடாம ஆந்தை அலறி, உயிரை வாங்கிட்டு” என்றாள்.
“களவாணி பயலுவ எவனுவளும் ஊருக்குள்ள வந்திருப்பவனுவளோ. நாய் வேறே கொலைச்சிச்சே” பாட்டியின் கேள்விக்கு உடனே பதில் கிடைச்சது.
“ஏலே .. நம்ம ரங்கன் சாம்பவனை நாய் கடிச்சு கொதறி போட்டுருக்கிலே” என்று பொன்னையா சாம்பவன் கத்த மொத்த ஊரும் கிணற்று பக்கத்தில் போய் நின்றனர்.
“யாருல முதலில பாத்தா?”.
“பொன்னையாத்தான். காலையில கம்மாய்க்கு ஒதுங்க போனவன் பாத்திருக்கான்”.
“என்னல நடந்துருக்கும்”.
“தெரியலையே”.
“நேத்து கூட ராத்திரி கோயில நின்னு எல்லாரையும் பாத்து பாத்து கவனிச்சானுவலே. சரி டே. இவன் கூட வந்த முத்து சாம்பவன் எங்கடே. வீட்டில படுத்துருக்கான?” ஊர் சாமியாடி கேட்டது.
மறு நிமிடம் மற்றொரு குரல் கேட்டது. “ஏடே இங்க ஒருத்தன் செத்து கிணத்துல மெதக்கான் டே”.
அனைத்து மக்களும் அங்கே ஓடினர். தலைகுப்புற அங்கே முத்து சாம்பவன் இறந்து கிடந்தான்.
“ஏதோ நடந்து இருக்கு. என்னமோ நடந்து இருக்கு” அனைவரின் மனதிலும் பயம் தொற்றிக்கொண்டது.
“இளவட்ட பயலுவ நம்ம கோயில போய் என்ன ஆச்சி ஏதாச்சுன்னு பாத்துட்டு வாங்கடே”. சாமியாடி சத்தம் கொடுத்தார்.
இளவட்டங்க பாய்ந்து வன்னராஜா கோயில் நோக்கி ஓடினார்கள். 10 நிமிடத்தில் காட்டு வழியாக கோயிலை அடைந்தார்கள். அங்கே கர்ப்பிணி பிச்சுமணி ஒரு புறம் சரிந்து விழுந்து இறந்திருக்க. மறு பக்கத்தில் மந்திரவாதி ரத்தம் கக்கி இறந்து கிடந்தான்.
புரிந்து போய் விட்டது. ஏதோ தப்பு செய்யப்போய் மூன்றுபேர் இறந்து போய் விட்டார்கள். அப்படியென்றால் இந்த பெண் பிச்சுமணியை கொன்றது யார்?. எதுக்காக கொன்றார்கள்?. பலருக்கு புரியாமல் புலம்பிக்கொண்டே தவித்தனர்.
போலீஸ் வந்தது. வேகமான நடவடிக்கை நடந்தது. ஒரே நாளில் எல்லா காரியமும் நடந்தேறியது பிச்சுமணியை இழந்த அவரது உறவு கூட்டம் ஊரை பார்த்து சாபமிட்டனர்.
“சாமியோ. நம்ப வச்சி கழுத்தை அறுத்து புட்டியல. உங்க குடும்பம் விளங்காது. நீங்க நாசமத்து நாதியத்து போயிருவீய” என மணலை அள்ளி வீசி விட்டு அடுத்த ஊருக்கு சென்று விட்டார்கள்.
*****
காலங்கள் கடந்தது.
இந்த சம்பவத்தினை யாருமே மறக்க முடியவில்லை. காரணம் முத்துசாம்பவன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரங்கன் சாம்பவன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குதொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது.
தீடீரென்று கலரா ஏற்பட்டது. 10 க்கு மேற்பட்டவர்கள் மடிந்தார்கள். இரவு குழந்தைகள் தூங்க முடியவில்லை. யாரோ பிரம்பால் அடிப்பது போல துள்ளி துடித்தது குழந்தைகள். சில குழந்தைகள் இறந்து விட்டது. குறிப்பாக பெண் குழந்தைகள் உயிரிழந்தது. ஆண் குழந்தைகள் கை கால் முடங்கியது. வாயில் இருந்து எச்சில் வடிந்தது. ஏதோ பிரச்சனை . ஒவ்வொரு வீட்டிலும் என்ன நடக்கபோவுது என்று தெரியாமல் பயந்தனர்.
ஆந்தை வேறு அடிக்கடி கத்திக்கொண்டே இருந்தது. ராத்திரி நேரத்தில் நாய் குறைச்சல் அதிகம். ஆவி நடமாட்டம் இருந்தால் இப்படித்தான் இருக்கும் என சாமியாடி கூறினார். இதற்கு முடிவு கட்டவேண்டும். வாரிசுகளை காப்பாற்ற வேண்டும்.
ஊர் சாமியாடி ஊர் கூட்டத்தை கூட்டினார். இரவு வேளையில் ஊர் பஞ்சாயத்தை சேர்ந்தவர் கல்தூணில் எரியும் கண்ணாடி விளக்குக்கு அதிகமாக எண்ணெய் ஊற்றி சென்றார். “ராத்திரி கூட்டம் நடக்கு. எதுக்கும் இன்னொரு நேரம் எண்ணெய் ஊத்த வாய்யா”. என்றார் அந்த ஊழியரை பார்த்து சாமியாடி.
“ஏன். சாமியாடி. நான் உயிரோட இருக்கிறது புடிக்கலையா?, ஏதோ கூட்டம் போடுதீய இருட்டுக்குள்ள இருக்கியளேன்னு வந்தேன். நடு ராத்திரியெல்லாம் வரமுடியாது. எனக்கு பிள்ளை குட்டி இருக்கு”. அவன் சத்தமாக பேசிவிட்டு சென்றான்.
அனைவரும் அமைதியாக இருந்தனர். உண்மைதானே “இங்க இருக்கீயவளே பயந்து சாவுறோம். பஞ்சாயத்து காரனும் சாவவா”. கூட்டத்தில் ஒருவன் பேசினான்.
ஊர் கூட்டத்தில் அனைவரும் அமைதியாக இருந்தனர்.
சிங்ககுட்டி தான் பேசினான். “போற போக்கு சரியில்லை. நாம் வசவப்புரம் கோடங்கி கிட்டே போய் என்ன ஏதுன்னு கேப்போம்”.
“யாருடே. வசவப்புரம் பன்னிமாட சாம்பானா?”
“அவுரு என்னடே இது பத்தி தெரியும். அவரு இதுக்கு என்ன சொல்லுவாரு”. கேட்டவரை முறைத்தான் சிங்ககுட்டி.
“உனக்கு அவரை பத்தி என்ன தெரியும். பொறந்தது சாம்பவன் குடும்பமுன்னு மட்டமா நினைச்சு புடாதேயும். அவரு எப்படி பட்டவரு தெரியுமா?”
யாருயும் எதிர்பார்க்காமல் பேச ஆரம்பித்தான்.
“ஒரு நாள் வல்லநாட்டு மலையில அவரு அலையும் போது யாரோ ஒரு சித்தர் வந்து நிறைய ஓலைச்சுவடியை குடுத்து, ஏடே இதுவரைக்கு நீரு ஆடு மேய்க்கிறவருதான். இனிமே நீர் சித்தர். பெரிய கோடங்கி. குறி சொல்லுவீரு.. நீரு மக்களுக்கு விபூதி கொடுத்தா நோய் நீங்குமுன்னு சொல்லிபுட்டாரு”.
“சாமி எனக்கு படிக்க கொள்ள தெரியாதே. இந்த ஓலை இலக்கை வச்சி நான் என்ன செய்ய போறேன் கேட்டுருக்காரு”.
“நீரு அப்படியே பக்கவட்டிக்கிட்ட போய் இந்த சுவடியை ஆத்தில விடும். அந்த ஆத்தில சில சுவடி எதுத்து நீச்சிக்கிட்டு போவும். அந்த சுவடியை மட்டும் படியும் . உமக்கு எல்லா வித்தையும் தெரிமுன்னு சொல்லிபுட்டு வல்லநாடு மலை உச்சியில போய் மறைஞ்சிட்டாவ. நம்ம சாம்பனும் ஓலை சுவடியை தலைச்சுமையா சுமந்துகிட்டு ஆத்துக்குள்ள இறங்கி மறு கரைக்கு வந்தாவ. அவுக வச்சிருந்த தலை சுமை தீடீருன்னு ஆத்துக்குள்ள விழுந்துட்டு, அப்போ சில சுவடி ஆத்துல நீந்திக்கிட்டு மேலே பாத்து போயிருக்கு. அதை புறாவும் எடுத்து பத்திரப்படுத்திக்கிட்டாவ.
மத்ததையும் விடல பின்னாலே நடந்து போய் ஆழிகுடி முத்தாலங்குறிச்சி வரைக்கும் கரையில ஓதுங்கினதை பொறக்கிட்டு வீடு வந்து சேந்திருக்காவ பன்னி மாடன் சாம்பான்.
அவுக வரும் போதே சிறப்பு வந்துட்டு, ஆத்துல நனைஞ்ச துணியை தோளில காயப்போட்டுட்டு வந்துருக்காவ. அந்த துண்டு அப்படியே அவருக்கு கொடை மாதிரி எந்த பிடிமானமும் இல்லாம பறக்க ஆரம்பிச்சு. எல்லோரும் வேடிக்கை பார்த்தவ. அதோட மட்டுமில்லாம அவுகல பாத்து பயந்து போயிட்டாவ.
அதுக்கப்புறம் தேடி வந்தவியியலுக்கு நோய் தீர்த்து உட்டுருக்காவ. இப்படி இருக்கும் போது தான் பக்கத்தில கீழபுத்தனேரி அய்யர் மாருவளுகளுக்கு இவுக மேலே கோபம். சாம்பவன் பய இப்படி நோய் தீக்கானே. இவனை சும்மா விடக்கூடாதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு அலைஞ்சிருக்காவ. ஒரு நாளு ஆத்துக்கு போயிட்டு வந்த சாம்பவன் கிட்ட சண்டை இழுத்துருக்காவ. இவரு உடனே அய்யருமாருகளுக்கு “பேதியில போவ” ன்னு சாபமிட்டு இருக்காவ.
அன்னையில இருந்து அய்யர் மாரு வீட்டில அத்தனை பேருக்கும் கலாரா மாரி ஆகி போயிச்சு. எல்லோரும் பன்னி மாடன் சாம்பவன் கிட்டே வந்து மன்னிப்பு கேட்டுருக்காவ. நீங்க எனக்கு பூடம் போட்டு கும்பிடனுமுன்னு சொல்லியிருக்காரு பன்னி மாட சாம்பான். “அது எப்படி நாங்க பெருமாள் சிவனுன்னு கும்பிடுதவிய. உனக்கு எப்படி பூடம் போட்டு கும்பிட முடியும் “ ன்னு கேட்டுருக்காவ.
“அப்பும் எப்படியும் நாசமாக போங்கன்னு” சொல்லிட்டாரு சாம்பன். வீட்டுக்கு போயிருக்காவ. நோயி தீரலை. கூட கொஞ்சம் கலாரா ஆட்டம் போ ஆரம்பிச்சிட்டு. வேற வழியில்லாம அய்யரு மாருவ அவுக அவுக வீட்டுக்கு பின்னால பன்னிமாடன் சாம்பவனுக்கு பூடம்போட்டு கும்பிட்டுருக்காவ. அதுக்கு பிறகுதான் நோய் தீர்ந்து போயிருக்கு.
இன்னைக்கும் அய்யர்மாருவ வீட்டுக்கு பின்னால இவுக பூடம் இருக்கு. அப்படி பட்டவிய நம்ம பன்னிமாட சாம்பான். அவுககிட்டே போனத்தான் நம்ம நோய் தீரும்”.
அனைவரும் சிங்க குட்டி சொன்னதை ஆமோதித்தார்கள். மறு நாளே சாத்தான்குளத்தில் இருந்து பேய்குளம் செய்துங்கநல்லூர் வழியா வசவப்புரத்து ஊர் கூட்டம் முழுவதும் நடந்தே வந்து சேர்ந்தனர்.
அங்கே பன்னி மாடன் இவர்களை எதிர்நோக்கி காத்திருந்தார்.
(தொடரும்)


