தாமிரபரணியை பாதுகாக்க மத்திய அரசுக்கு மாநில அரசுதிட்ட அறிக்கை அனுப்பவேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிரபித்தது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை ஐகோர்டில் தாக்கல் செய்த மனுவில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள பழமையான படித்துறைகள் மண்டபங்கள் பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவு வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி வாதாடினார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் நெல்லை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும் தாமிரபரணி ஆற்றில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். ஆற்றின் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் படி நெல்லை மாவட்ட நிர்வாகம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதலை வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் அந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி.ராபர்ட் புரூஸ் நேரில் ஆஜரானார். அவர் நீதிபதியிடம் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தி பாதுகாக்கும்படி நாடாளுமன்றத்தில் பேசினேன். தாமிரபரணியை பாதுகாக்கக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா எனவும் கோரினேன். அப்போது மத்திய அரசு தரப்பில் 17 மாநிலங்களில் 57 நதிகளை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்காக சுமார் ரூபாய் 99 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க கோரி மாநில அரசு சார்பில் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே தாமிரபரணியை பாதுகாக்கும் நடவடிக்கைக்காக மத்திய அரசிடம் உரிய நிதி கேட்டு பெற மாநில அரசு திட்ட அறிக்கையை தயாரித்து அனுப்பும்படி உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர் வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்களால் வனப்பகுதி அசுத்தமாகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் பக்தர்கள் நடவடிக்கை உள்ளது. இதனால் அகஸ்தியர் அருவில் தண்ணீர் அசுத்தமாக மாறுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பக்தர்களின் மத நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் பாதுக்கப்பட்ட வனப்பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில் சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியை பாதுகாக்கும் வகையில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அடுத்த விசாரணையில் அதிகாரிகள் ஆஜராக தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து வழக்கை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


