திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய பயணிகள் ரயில் 19 தினங்களுக்கு பின்னர் டீசல் எஞ்சின் பொறுத்தி மீட்கப்பட்டு திருநெல்வேலிக்கு 9.30க்கு வந்து சேர்ந்தது. இதனால்
6 ந்தேதி முதல் திருச்செந்தூர் ரயில் இயங்கும் என நம்பிக்கை பிறந்துள்ளது. ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரயில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம் இருந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் ஏராமாளனோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் கடந்த டிசம்பர் 17ம் தேதி இரவு 8.30 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 820 பயணிகளுடன் கிளம்பியது. இரவு 9 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தது. இதனால் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ரயிலில் பயணம் செய்த 820 பயனாளிகளும் பெரிதும் அவதி அடைந்தனர். அவர்களை மீட்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டனர். மேலு திருச்செந்தூர் நெல்லை பாஸஞ்சர் ரயில் ஒன்று திருச்செந்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் முதல்கட்டமாக திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரையிலான ரயில் தண்டவாளங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டது.
முதல் கட்டமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மழையில் சிக்கியிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மீட்க ரயில்வே துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் காரணமாக 2.01.2024 காலை 11 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து டீசல் எஞ்சின் வரை கொண்டுவரப்பட்டது. அதை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் ரயில்வே ஊழியர்கள் பொறுத்தினர். அதை தொடர்ந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொறுத்தப்பட்டிருந்த 22 பெட்டிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெட்டிக்குள் யாரும் இருக்கிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் பார்வையிட்டனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் மதியம் சுமார் 1.30 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து டீசல் எஞ்சின் மூலம் மீட்கப்பட்டது.
மேலும் திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில்வே தண்டவாளத்தில் ஆழ்வார்திருநகரி பகுதியில் தண்டவாளம் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது. தற்போது திருச்செந்தூர் வரை ரயில் பாதை சீரமைக்கப்பட்டு விட்டது. இதனால் திருச்செந்தூரில் நின்ற பயணிகள் ரயில் இரவு 7 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து கிளம்பியது. சுமார் 20 இடத்தில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் 20கிலோ மீட்டர் வேகத்தில் அந்த ரயில் கடந்தது.
மிகப்பெரிய சேதத்தினை ஏற்படுத்திய ரயில் பாதையை 19 தினங்களில் சீரமைத்த ரயில்வே நிர்வாகத்தினை பொதுமக்கள் பாரட்டினர். மேலும் 5 ந்தேதி வரை ரயில் ரத்து என அறிவிக்கப்பட்டிருந்தது. மறு அறிவுப்பு எதுவும் வரவில்லை. எனவே 6 ந்தேதி முதல் திருச்செந்தூர் ரயில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றே செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுமா? அல்லது மறு தேதி அறிவிக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்
ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரயில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தாதன்குளம் ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கிய ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி தாதன்குளம் மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். எனவே பாலக்காடு ரயில் இயக்கும் போது இந்த மூன்று நிலையத்திலும் கொரனா காலத்துக்கு முன்பு நின்று சென்றது போலவே பாலக்காடு ரயில் நின்று செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


