–
அந்தத் தெரு மட்டுமல்ல, அந்தக் கிராமமே பாலா கவலைக்கிடமாக இருப்பதை நினைத்து சோகத்தில் மூழ்கியது.
தாய் தகப்பன் இல்லாத வேலனுக்கு கழுத்தை நீட்டிய வள்ளி அந்த கிராமத்தில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்கள் ஓடிவிட்டன. வேலனுக்கு தாய்க்குத் தாயாய், தாரமாய் இருந்து அன்பாய் கவனித்துக் கொண்டாள். ஆனால் அவளுக்கு வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட தங்க மறுத்துவிட்டார் கடவுள்.
இரண்டு வருடங்களுக்கு முன் வள்ளியும், வேலனும் சந்தைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பேருந்துக்காகக் காத்திருக்கையில் தான் பாலா வேகமாய் வந்து வள்ளியிடம் ஒட்டிக்கொண்டான். பிள்ளைகளோடு போவோரையும், வருவோரையும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, பாலாவைப் பார்க்கவும் அவளிடமிருந்த சோகம் மறைந்து விட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை வேலனுக்கும் வள்ளிக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பாலாவின் மேல் அளவு கடந்த அன்பு காட்டினாள். அவனும் ‘ம்மா … ம்மா…’ என அபரிமிதமான அன்பு வைத்திருந்தான்.
அவன் சுகமில்லாமல் போனதால், ‘பாலா …. பாலா’ என உருகிக் கொண்டு பட்டினி கிடந்தாள். டாக்டரிடம் காண்பிக்க, அவர் கையை விரித்துவிட்டார். தலையில் அடித்துக் கொண்டு, “எனக்கு பிள்ளையில்லாத குறை தீர்ப்பாய் என நினைத்தேனே! என்னை அனாதையாய் விட்டுட்டுப் போயிடாதே” என அழுது கொண்டிருக்க, பாலா அவள் மடியில் உயிர்விட, அதைப் பார்த்த வள்ளியின் இதயமும் சுக்கு நூறாய் வெடிக்க, அவளது உயிரும் பிரிய, வேலன் அனாதையாக நின்றான்.
கிராமமே அங்கு கூடியிருந்தது. ஆளாளுக்கு ஆறுதல் கூறினார்கள்.
‘பாலா சுதந்திரமாக திரியட்டும் என்று கயிற்றில் கூட கட்டிப் போடாமல் இருந்தாளே!’
‘தொழுவில் கட்டி வளர்க்காமல், சொந்த பிள்ளையை போல் நடு வீட்டில் அல்லவா வளர்த்தாள்!’
‘பெத்த பிள்ளையைக் கூட இப்படி வளர்த்திருப்பாளோ என்னவோ! பாலாவுக்கு எவ்வளவு செல்லம்!’
‘பாலா வாலைத் தூக்கிக் கொண்டு ஓடும் போது அவன் திமில் எவ்வளவு அழகாய் இருக்கும்!’
‘கொம்பு முளைக்கவில்லை என்றாலும், அவன் தலையை சிலுப்பும் அழகே அழகு’
என கிராமத்து பெண்கள் மூக்கைச் சிந்திக்கொண்டு, கண்ணீர் வடித்தனர்.


