தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர்/பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர்/பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தெரிவித்ததாவது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ.100 கோடி மற்றும் எச்.சி.எல். நிறுவனர் சிவ் நாடார் அவர்களின் மூலம் ரூ.200 கோடி என மொத்தம் ரூ.300 கோடி செலவில் அலுவலக கட்டிடம், தங்கும்விடுதி, உணவுக்கூடங்கள், வாகன நிறுத்துமிடம், பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் வசதி என பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதை இன்று பார்வையிட்டோம். மேலும், உடன்குடியில் ரூ.9,250 கோடி மதிப்பில் 1301 மெகாவாட் அனல்மின்நிலையம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டோம். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழுவுக்கு ஒத்துழைப்பு அளித்த மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உறுதிமொழிகளை முடித்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும், துறைத்தலைவர்களுக்கும் குழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உறுதிமொழிக்குழு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குழு. இந்த குழு தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் கொடுக்கின்ற உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் எங்களுடைய கேள்விகளும், உங்களிடத்தில் எதிர்பார்க்கிற பதிலும் அமைந்திருக்க விரும்புகிறேன். அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல.
உறுதிமொழிகளை நிறைவேற்றினால் மக்களுக்கு நன்மை பயக்கும். மிகவும் நிர்வாகத்திறமை வாய்ந்த மாவட்ட ஆட்சியர் அவர்களும், மிகவும்திறமையாக சட்டம் ஒழுங்கை காக்கின்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கிடைத்திருக்கிறார்கள். மாநகராட்சி ஆணையாளர், சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என அனைவரும் ஒருங்கிணைந்து மாவட்ட மக்களின் நலன் காப்பதற்கு பணிபுரிய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர்/பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழுவிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மடக்கு சக்கர நாற்காலி, நவம்பர் 2023 முதல் ரூ.2000/- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணை, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 3 பேருக்கு தலா ரூ.6,680/- மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர்/பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் வழங்கினார்.
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் (சேலம் வடக்கு),எம்.கே.மோகன் (அண்ணாநகர்), பெ.ராமலிங்கம் (நாமக்கல்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை), மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி சட்டமன்ற செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார் சட்டமன்ற இணை செயலாளர் மு.கருணாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், இ.வ.ப., சட்டமன்ற துணை செயலாளர் ஸ்ரீ.ரா.ரவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


