தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்ட வாய்ச்சி எனப்படும் இளைப்பு உபகரணம் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் பெண் தெய்வம்!!.,..தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் களமாக தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரின் சுமார் 300ஏக்கர் பரப்பளவு பகுதியில் நேற்று ஊர்மக்கள் வாயிலாக கண்டெடுக்கப்பட்ட சிறிய அளவிலான 5.4செ.மீ உயரம் கொண்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் உருவத்தின் நெஞ்சு மார்பு பகுதி வரையிலான இரு கரங்கள் இல்லாத சிதைவு மிகுந்த அழகான ஆபரண கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன், சிரசில் அழகிய கொண்டையுடன் காணப்படுகிறது. எங்கள் ஒப்பீடு ஆய்வின் படி இதன் முழு உருவம் 17 -18 செ.மீ(7″) உயரம் கொண்டதாக இருந்திருக்கலாம் என்பதும், இதன் உருவ அமைப்பு நம் ஐம்பெரும் காப்பியங்களில் குறிப்பிடப்படும் நமது தாய் தெய்வமான சம்பாபதி அம்மன் ஆலய சதுக்க பூதம் போன்று தென்படுகிறது. ஏற்கனவே இதே போன்ற இரண்டு வேறு அமைப்பு கொண்ட பெண் தெய்வம் போன்ற சுடுமண் சிற்பங்கள் பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.இதேபோன்ற சில சுடுமண் சிற்பங்கள் பூம்புகார், கீழடி போன்ற பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மக்கள் ஒப்படைத்த சிறிய கருப்பு நிற சாய்வு முக்கோண வடிவம் மற்றும் வழுவழுப்பான 3.2செ.மீ அகலம் கொண்ட பொருளின் அமைப்பானது இளைப்பு உபகரணம் (அ) கை அடக்கமான கல் ஆயுதம் போன்று உள்ளது. மேலும் இதன் பக்கவாட்டில் நம் பாண்டியர்கள் சின்னமான 9.0மி.மீ நீளம் கொண்ட மிக சிறிய ஒற்றை மீன் பொரிக்கப்பட்டு, பிரதான பகுதியில் ‘வலபா…’ என்று நான்கு உறுமாறிய பிற்கால வட்டெழுத்துக்கள் தென்படுகின்றன. இதில் கடைசி எழுத்து மட்டும் அடையாளம் கண்டு உறுதி படுத்த இயலவில்லை. எழுத்து வடிவம் வாயிலாக இதன் காலகட்டம் 8-9ம் நூற்றாண்டினை சார்ந்ததாக இருக்கா கலாம். கூடுதலாக 9ம் நூற்றாண்டின் மத்தி பகுதி வரை சீவ(ல்ல)லபன் என்ற மன்னன் நம் பாண்டிய நாட்டின் எல்லையை கிழக்கே இலங்கை வரையும், வடக்கே திருச்சி வரையும் விரிவு படுத்தி மிக சிறந்த நீர் மேலாண்மை பணிகளை செய்தார் என்பதை வரலாற்று குறிப்புகள் வாயிலாக அறியமுடிகிறது. கூடுதல் சான்றுகள் போன்று நமது சித்தாறு தாமிரபரணி உடன் சங்கமிக்கும் பகுதியில் தான் தற்போது சீவலப்பேரி என்றழைக்கப்படும் பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மாவட்ட தொல்லியல் துறையின் பொறுப்பு அதிகாரியிடம் தகவல்கள் பரிமாறப்பட்டது. அவர் கூறுகையில் இவைகள் முக்கிய ஆதாரமாக விளங்கும் தன்மை கொண்டது என்றும் நமது பட்டினம் மருதூர் தொடர்பான அகழாய்வு பணிக்கான ஒப்புதல் மத்திய தொல்லியல் குழுவினர் வாயிலாக வழங்கப்பட்டு விடும் எனவே அவர்கள் வெகு விரைவில் களம் கண்டு இதுவரை கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களையும் கணக்கில் கொள்வோம் என்றார்.
எனவே இந்த மழைக்காலம் முடியும் தருவாயில் நமது தென்மதுரை (ரா) என நாங்கள் கருதும் தருவைக்குளம் – பட்டினமருதூர பகுதியில் பிரபஞ்சத்தின் கருணையால் ஆரம்பம் ஆகி நம்மை வெளிவரும் தொல்லியல் எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்கள் வாயிலாக ஆச்சரியம் அடைய செய்து உலகிற்கு தமிழர்களின் கலாச்சார மேம்பாடு உண்மை உலகுணர செய்வது திண்ணம்.
நாங்கள் கடந்த ஆண்டு முக்கிய ஆதாரமாக சென்னை கிறித்தவக் கல்லூரி மாணவர் சகிதம் 03.11.2024 அன்று பட்டினமருதூரில் கண்டெடுத்த தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு நமது கோரிக்கைகளுக்கு மிகுந்த வலுசேர்க்கும் விதமாக அமைந்தது. இதுவரை பட்டினம் மருதூர் தொடர்பான அனைத்து செய்திகளும் மக்களுக்கும், அரசிற்கும் கொண்டு சேர்க்கும் நல்ல இணைப்பு பாலமாக அமையும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்திற்கும் பொதுமக்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் சார்பாக மிகுந்த நன்றிகள்.
பெ.ராஜேஷ் செல்வரதி
வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர்
தூத்துக்குடி


