தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையில் 2000 ஏக்கரில் பரம்பு ஒன்று பறந்து விரிந்து காணப்பட்டது. இந்த பரம்பு பகுதியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் சிதைந்த நிலையில் கிடப்பதை கண்டு இந்த பகுதியில் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் என்பவர் கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் முறையாக சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.
தொடர்ந்து மூன்று வருடங்களாக இந்தாண்டு வரை இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் இதுவரை 700க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாழ்விடப்பகுதிகளில் தக்களி எனும் நூல் பிரிக்கும் கருவி, கூர்முனை கருவி, வட்டசில்கள், சக்கரம், தங்கப்பொருள், கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள், புகைப்பான் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளது. அதே போல் வாள், கத்தி, உளி, கோடாரி போன்ற இரும்பு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3 கட்டமாக நடந்து வந்த அகழாய்வு பணியில் இதுவரை 120 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக இந்தாண்டு 80 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பானைகள், கிண்ணங்கள், மூடிகள் என 800க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீறல்கள், குறியீடுகள் கொண்ட பானைகள் 150க்கும் மேற்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழாய்வு பணி கடந்த மாதம் 30ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கிடையில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அகழாய்வு பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு மண்ணால் இந்த குழிகள் மூடப்பட்டு வருகிறது.


