தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கடந்த மாதம் 5 ந்தேதி கனிமொழி எம்பி முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதல் முதலாக இங்கு தான் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளது உள்ள படியே என்ற படி இங்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் அதன் மேல் கண்ணாடி அமைக்கப்பட்டு அதன் மீது நின்று பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட ஏராளமானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். திரைப்பட இயக்குனர்கள், அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த இடத்தனை பார்வையிட வந்த வண்ணம் உள்ளனர். இந்த இடத்தினை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் பார்வையிட வந்தார். அவர் முழு எலும்பு கூடு உள்ள பகுதி, புதிதாக அமையவுள்ள அருங்காட்சியகம் மாடல், தமிழகத்தில் உள்ள புதை குழிகள் படம். 2023 ல் நடந்த அகழாய்வு பற்றிய குறிப்புகள், கிடைத்த தங்கம், வெண்கலம், இரும்பு பொருள்கள் பற்றி விவரங்கள், இங்கு நடைபெற்ற ஆய்வு விவரங்களை பார்வையிட்டார். அதன் பின் சங்ககால இலங்கியங்களை உண்மையென உரைத்த ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து சைட் மியூசியம் கண்ணாடி மேல் நின்று அங்குள்ள முதுமக்கள் தாழிகள் குறித்த பார்வையிட்டார். அவருக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார்.

அதன் பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது. எனது தொகுதியான ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதல் முதலாக சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் எங்களை மிகவும் பெருமைபட வைக்கிறது. ஆதிச்சநல்லூரால் தமிழர்களான நம் அனைவருக்கும் பெருமை பட்டுள்ளோம். இங்கு அரசு பள்ளி மாணவ மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிடுவது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. இதுபோலவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் இங்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும். தினமும் சராசரியாக 100க்கு மேற்பட்டவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து செல்கிறார்கள் என கேள்விப்பட்டேன். தமிழர்களின் நாகரீகம் அறிய இதை விட அதிக மாணவர்கள் இங்கு வந்து செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனைத்து கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் வந்து செல்ல அறிவுருத்த வேண்டும். தினமும் ஆதிச்சநல்லூர் குறித்து அதிக செய்திகள் ஊடகங்களில் வரவேண்டும். இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியுசியத்தினை அமைத்து விட்டு, அதை யாரும் பார்க்காமல் இருந்தால் நாம் தமிழர்களாக இருப்பதில் பயன் இல்லை. மேலும் பஸ் போக்குவரத்து உள்பட பல அடிப்படை வசதிகளை ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் அமைய அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன் என்று அவர் கூறினார்.
அவருடன் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், கருங்குளம் வட்டார தலைவர் புங்கன், ஆழ்வார்திருநகரி கோதண்டம், எடிசன், சந்திரன், சித்திரைவேல், சித்திரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.



