தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ வழக்குகளில் கைதான, 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழகாலனியை சேர்ந்தவர் சுப்பையா (75). இவரை, அவரது மகன் ஜெயக்குமார் (42) என்பவர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தார். இதனை தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் நத்தம் இந்திராநகரை சேர்ந்த காசிராஜன் மகன் ராஜ்குமார் (29) என்பவர் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர். கோவில்பட்டி பாண்டவர் மங்கலத்தை சேர்ந்த முனியசாமி மகன் மகேந்திரன் (42), இலுப்பையூரணியை சேர்ந்த சுடலைகண்ணு மகன் மாயா (39) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான 4 பேர் மீதும் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை சிறையில் வழங்கினர். நடப்பு ஆண்டில் இதுவரை 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


