நெல்லையில் இருந்து வெளிவரும் நெல்லை டைம்ஸ் நாளிதழில் நான் எழுதிய பொருநை நதியில் புதைந்த ரகசியங்கள் 22 வது பகுதி வெளிவந்துள்ளது. வெளியிட்ட பொறுப்பாசிரியர் தம்பான் மற்றும் நிர்வாகத்துக்கு நன்றி. அன்புடன எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுபொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள்
-முத்தாலங்குறிச்சி காமராசு
22. 100 வருடங்களை கடந்தும் நிமிர்ந்து நிற்கும் மரப்பாலம்
1992-ஆம் ஆண்டு அடித்த பெரும் புயல் வெள்ளத்தில் பொதிகை மலையில், சேர்வலாறு கரையில் சிமெண்ட் பாலங்களே நொறுங்கி விழுந்தது. ஆனால் காரையாறு பகுதியில் உள்ள மரப்பாலம் மட்டும் சிறு சேதாரம் கூட நேராமல் நின்றதே. நிற்கிறதே. அதுதான் ஆச்சரியமான விஷயம்.
தாமிரபரணியை உருட்டிப் போட்ட மழை வெள்ளத்தில். பலகோடி ரூபாய் மரங்கள் அடித்து வரப்பட்டது. தாமிரபரணி ஆக்ரோஷமாய் கிளம்பிப் பல குடியிருப்புகளைப் பதம் பார்த்தது. சேர்வலாற்றில் வந்த வெள்ளத்தின் காரணமாய், மிக உயரமாகப் போடப்பட்ட சிமெண்ட பாலம் உடைந்து காரையார் பகுதியே துண்டிக்கப்பட்டது. மின்சாரம் தயாரிக்கும் இடத்துக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரமே பாழ்பட்டது. மின் உற்பத்தி தடைப்பட்டது. கல்யாண தீர்த்தம் பகுதியில் பாய்ந்த வெள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்தச் சிவனாலயம் மேல் கூரை உடைந்து, ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டது. இந்தச் சமயத்திலும் மேலணை அருகே காணி குடியிருப்பான மயிலாறு பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள மரப்பாலம் ஒன்று எந்தவொரு சேதாரமும் இல்லாமல் அப்படியே நிற்கிறது. ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான்.
அதை காணத்தான் நாங்கள் சென்றோம். காரையாறு செல்லும் இடத்தில் மயிலாறு காணிகள் குடியிருப்பு செல்லும் இடம். இங்கு தான் ரேசன் கடை உள்ளது. அருகில் தபால் நிலையமும் உள்ளது. சுடுதோஸ் ஹோட்டல் என்று வித்தியாசமான பெயருடன் ஒரு ஹோட்டல் உள்ளது. பெரியவர் படத்துடன் மிகப்பிரமாண்டாக காணப்படுகிறது. ஆனால் இந்த ஹோட்டலில் கிறிஸ்தவர் ஒருவர் வீடு உள்ளது. அந்த வீட்டில் உள்ளே கிறிஸ்தவ பாதிரியார்கள் கௌசானல் அடிகளார் , வெர்டியர் அடிகளார் ஆகியோர் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் பெரியவரிடம் கேட்ட போது, இந்த மரப்பாலம் ஒரு நூற்றாண்டை கடந்து நிற்பதற்கு காரணம் கிறிஸ்தவ பாதிரியார் கௌசானல் அடிகளாரின் ஆசிர் வாதம் என்றார். அதை மற்றவர்களும் உண்மை என்கிறார்கள்.
இவ்விடத்திற்காக ஹோட்டலில் இருந்து இறங்கி சரிவு வழியாக நடந்து சென்றால் சிறிது தூரத்தில் மரப்பாலத்தின் வழியாக தாமிரபரணி ஆற்றை கடந்து மயிலாறு பகுதியை சென்றடையலாம்.
மயிலாறு காணி இன மக்கள் தாமிரபரணியைக் கடக்கக் கஷ்டப்படுகிறார்கள் என்று மரத்தாலான பாலத்தை உருவாக்கினார் கௌசானல் அடிகளார். அந்தப் பாலத்தைத் தான் நூற்றாண்டைக் கடந்தும் காணி இன மக்கள் சிறுசிறு மாற்றத்தை ஏற்படுத்தி, தற்போதும் பயன்படுத்தி வருகிறார்கள்.
கௌசானல் அடிகளார் காணி இன மக்களிடம் உறுதியான பாசம் வைத்திருந்தது போல இந்தப் பாலமும் நூற்றாண்டைக் கடந்தும் கம்பீரமாகக் காணப்படுகிறது.
125 ஆண்டுகளுக்கு முன்னால் காரையாறு செல்லவேண்டும் என்றால் ஒற்றையடி மண் பாதையாகத்தான் இருந்தது. குதிரை ஓடும் ஓடுதளம் தான் இந்தப் பகுதியில் அதிகம். அந்த வழியாகக் குதிரையில் சென்றுதான் பழங்குடி மக்களைச் சந்தித்துள்ளார் கௌசானல் அடிகளார். இதுபோன்ற குதிரை ஓடு தளம் அகத்தியர் அருவில் அருகில் இருந்து மலை மீது ஏறிச்செல்லும் மாறு அமைந்திருந்தது. தற்போது இந்த பாதை மரம் செடிகொடி அடர்ந்து அழிந்து விட்டது.
கட்டளை மலையில் தோட்ட வேலை செய்ய இங்குள்ள காணி இன மக்களைத்தான் பயன்படுத்தியுள்ளார் கௌசானல் அடிகளார். இந்த மக்களோடு மக்களாக வாழ்ந்துள்ளார். தாமிரபரணி கொதித்தெழும் வெள்ளத்துக்கு எல்லாம் இந்தப் பாலம் தற்போதும் ஈடுகொடுத்துக்கொண்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பாவநாசம் மேலணை கட்டும் போதும் கூட தளவாடப் பொருள்களைக் கொண்டு செல்ல இந்தப் பாலத்தினைப் பயன்படுத்தியுள்ளனர்.
காணி இன மக்களுக்கும் கௌசானல் அடிகளாருக்கும் இந்தத் தொடர்பு வருவதற்கு காரணமே கட்டளை மலை எஸ்ட்டேட் தான். பாளையங்கோட்டை மறை மாவட்ட அதிபரான சுவாமி வெர்டியர் என்னும் ஞானப்பிரகாசியார் சுவாமி 1893-இல் பாவநாச மலைப்பகுதியில் கட்டளை மலையை விலைக்கு வாங்கினார். அதோடு சேர்ந்த விக்கிரமசிங்கபுரம் ஊர் அருகே உள்ள மலையடிவாரத்தில் உள்ள நிலப்பகுதியையும் வாங்கினார். அதன் ஒரு பகுதி உச்சன் குளம் என்றும் அழைக்கப்பட்டது. உச்சன் குளம் என்றால் பெரிய மனிதனின் குளம் என்பது பொருள்.
வெர்டியர் சுவாமிகளை அடுத்து பாளையங்கோட்டை அதிபரானார் கௌசானல் அடிகளார். உச்சன் குளத்தில் ஒரு நெற் களஞ்சியத்தினையும், பண்ணை பீடமும் அமைத்தார். மலையிலிருந்து வரும் காப்பி, தேயிலை மற்றும் நறுமணப்பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்து வைக்கும் வசதியிலும், விவசாயப் பண்ணையில் பணி புரியும் வேலையாட்கள், கால்நடைகள் போன்றவையும் இப்பண்ணை வீட்டில் இடம் பெற்றன. இந்தக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கோயிலையும் அமைத்தார். உச்சன் குளத்தினை இருதயக்குளம் என்று பெயர் மாற்றினார். இதுவே பின்னாளில் திரு இருதய ஆலயமாக உருவெடுத்தது.
அந்த பிரமாண்டமான கட்டிடத்தில் மணிக்கூண்டை 1904 இல் கௌசானல் அடிகளார் கட்டினார். அதன் பின்னால் 1913 ல் அந்த ஆலயத்தினை விரிவு படுத்தினார்கள் கிரஞ்சு அடிகளார்.
இந்தக் கட்டிடம் பிரமாண்டமாகக் காணப்படுகிறது. இதற்குக் காரணம் கௌசானல் அடிகளாரின் உழைப்பு. இங்கிருந்து கட்டளை மலைக்கு அவர் குதிரையில் செல்வார். இதற்காக அவர் குதிரைகளைப் பயன்படுத்தினார். மலையில் இருந்து பொருள்களைக் கீழே கொண்டு வர சுமார் 100 கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. அந்தக் கழுதைகளைக் கட்டி வைக்கக் கட்டிடமும் உருவாக்கப்பட்டது.
கட்டளை மலை என்பது தற்போது பாவநாசம் மேலணை உள்ளபகுதியில் மூழ்கி விட்டது. இங்கு, காணி இன மக்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் மற்றும் அவர்கள் தியானம் செய்ய ஒரு ஆலயத்தினையும் எழுப்பினார். இந்த ஆலயம் பாவநாசம் மேலணை கட்டும் போது அணைக்குள் மூழ்கி விட்டது. தற்போதும் 27 அடிக்குக் கீழே தண்ணீர் சென்றால் இந்தப் பள்ளிக்கட்டிடத்தினையும், அங்கிருந்த ஆலயத்தினையும், ஓங்கி வளர்ந்து நின்ற தென்னை மரங்களையும் காணமுடியும். இந்தப் பள்ளிக் கட்டிடம் தான் பின் நாளில் காரையாறு பகுதிக்கு மாற்றப்பட்டு காணி குடியிருப்பில் “பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி”யாக காணப்படுகிறது.
இது போல் அரியப் பெரியக் காரியங்களை எல்லாம் செய்த கௌசானல் அடிகளார் பொதிகை மலை உச்சி வரை குதிரையில் சென்று திரும்பி விடுவாராம். அவர் நேசித்த பொதிகை மலைக் காட்டைப் பேணிக் காக்கும் காணி மக்களைத் தனது உயிராகவே மதித்து வந்தார்.
பொதிகை மலையில் வசிப்பவர்களில் பளியர், என்ற ஒருவகையினரும் உள்ளனர். இவர்களும் காணிக்காரர்கள் போலவே வாழ்ந்து உள்ளனர். ஒருகாலத்தில் ஆடவரோ, பெண்டிரோ மார்பில் துணி அணியாமல் இருப்பர். மரங்களில் பெண்கள் கூட ஏறுவர். குகைகளிலும், குடைவுகளிலும், வாழ்ந்தனர். தேனும், கள்ளும், இறைச்சியுமே இவர்களது உணவுப் பொருள்கள். ஒரு ஆடவர் பலபெண்களை மணக்கலாம். இவர்களது குழந்தைகளுக்குப் புலிப் பல்லையோ அல்லது புலி நகத்தையோ கட்டுவர். இவர்கள் யானைகளைப் பிடித்துக் கொடுத்து அவற்றால் கிடைக்கும் வருவாயினைக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். ஆனால் தற்போது அவர்கள் தாமிரபரணி கரை பகுதியில் காணப்படவில்லை. இவர்களை பற்றி புளியங்குடி அருகில் உள்ள மலை பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களுககு புளியங்குடி அருகில் மலை அடிவாரத்தில் குடியிருப்பு ஒன்றை அரசு அமைத்து கொடுத்துள்ளது.
மோசஸ் முத்துமாலை என்ற கிறிஸ்தவ பிரசங்கியர்கள் பளியர்கள் மத்தியில் ஊழியம் செய்து அவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றினார். இதனால் பல சுவராசியமான சம்பவங்கள் பிறந்தது.
புளியங்குடி மலையில் ஆடையின்றி நிர்வாணமாக பளியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் நெருப்பை வணங்கி வந்தனர். அவர்கள் தங்கள் உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டு இடம் பெயர்வர். பெரும்பாலுமே இவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் குகை பகுதிகளில்தான் வாழ்ந்து வந்தார்கள்.
இவர்களுக்கு வேறு எந்த விவரமும் தெரியாது. இவர்களை அந்த காலத்தில் உள்ள பாளையக்காரர்கள் மிகவும் வாட்டி வதைத்து வந்தனர். வேட்டைக்குச் சென்று விட்டு, அவர்களிடம் தேன், குங்குலிங்கம், சாம்பிராணி போன்ற பொருள்களைப் பிடுங்கிக் கொண்டு வந்தார்கள். எனவே இவர்கள் பாளையக்காரர்களைக் கண்டவுடன் பயந்து நடுங்கினர். இவர்களுக்கு விடுதலைக் கிடைக்க வேண்டும் என்று மோசஸ் முத்துமாலை முடிவு செய்தார்.
இவர் அடர்ந்த காட்டு வழியாக மலை குகைக்குள் சென்றார். அங்குபோய் பளியர்களைப் போலவே நிர்வாணமாக வாழ்ந்தார். தன் உடல் மீதும் சாம்பலைப் பூசிக்கொண்டார். அதன் பின் அவர்கள் உடன் குகையில் தங்கியே இயேசுவைப் பற்றி பேசினார். அதன்பின் அவர்களை மனம் திரும்ப செய்தார். பின் அவர்களை மலைக்குக் கீழே கூட்டி வந்தார். இந்த சமயத்தில் இதுபோல் மனது திரும்பி வந்த அவர்களுக்-கு ஐ.எம்.எஸ் மூலமாக 31.05.1917 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆராதனைச் செய்ய ஒரு சிறிய ஆலயமும் அங்குள்ளது.
தற்போது அந்த மக்கள் வாழும் குகை பகுதிக்குச் செல்வது கடினமானது. மலை அடிவாரத்தில் அந்த பளியர் வாழ்ந்து வந்த இடத்துக்கு களப்பணிக்கு சென்ற போது பல அற்புதங்களை நான் பார்த்தேன். 1 மாதத்திற்கு முன்பு கரடி கடித்து பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவரை பார்த்தேன். அவர் கரடியிடம் கடிபட்டு இரத்த காயத்துடன் இருந்ததைப் பத்திரிக்கையிலும் படித்திருக்கிறேன். அவர் தற்போது ஓரளவு குணமான நிலையில் எங்களைச் சந்தித்தார்.
எங்களுக்குக் குகைக்குச் செல்ல காட்டு இலக்கா அனுமதி தரவில்லை. அருகில் ஒரு ஒடை. அதைக் கடந்து கொஞ்சதூரம் போனோம். இரவு அங்கேயே தங்கினோம். கரடி பயம் எங்களுக்கு இருந்தது. ஆலயத்தில் சமையல் செய்து, அங்கேயே சாப்பிட்டோம். இரவு நேரத்தில் அருகில் உள்ள பாறையில் அமர்ந்து கிழங்கு வகைகளைச் சுட்டுத்தின்றோம். கரடியால் கடிபட்டவர் எங்கள் அருகில் இருந்து கிழங்குகளைச் சுட்டுத்தந்துக் கொண்டிருந்தார்.
வசந்த டிவியில் புலன் விசாரணைக்காகத்தான் நாங்கள் இரவு காத்து கிடந்தோம். எங்கள் குழுவில் நிகழ்ச்சி டைரக்டர் முத்துகுமார், நடிகை நிஷா, கேமராமேன் பரமசிவம், சங்கர், கடையம் பாரதி, முதலைகுளம் முத்து மற்றும் பளியர் குடியிருப்பு மக்களும் உடன் இருந்தனர். இரவு நல்லதொரு நினைவாக நிலாவின் வர்ணஜாலத்தினை கண்டு களித்தோம். இந்த நேரத்தில் யானையை பற்றிய பயம் எங்களுக்கும் பளியர்களுக்கும் இருந்தது. நாங்கள் இரவு தங்கிய நேரம் யானைகள் கூட்டம் கூட்டமாக இறங்கியது. இதனால் காட்டு இலக்கா அதிகாரிகள் எங்களை பாதுகாக்க காவல் கிடந்தனர்.
மறுநாள் காலையில் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் குகை பகுதிக்கு செல்ல முடியாமல் வனத்துறையினர் தடுத்து விட்டனர். ஆனால் பளியர் இனத்தினை சேர்ந்தவர்கள் காட்டுக்குள் சென்று வேலை செய்து விட்டு இறங்கினர். அவர்களிடம் விசாரித்தோம். தற்போது குகை பகுதிக்கு யாருமே செல்ல முடியாதாம். அந்த அளவுக்கு குகை அழிந்து விட்டது என்றார்கள். இதுபோன்று ஒரு பயங்கரமான இடத்தில், பயங்கரமான சூழ்நிலையில் கிறிஸ்தவ மதத்தினைப் பரப்பச் சென்ற முத்துமாலை அவர்களை நினைத்தால் பெருமையாகத்தான் இருக்கிறது.
மோசஸ் முத்துமாலை காலத்தில் சிறுவனாக இருந்தவர்கள் தற்போது பெரியவர்களாக இருந்தார்கள், அவர்களிடம் நாங்கள் மோசஸ் முத்துமாலையைப் பற்றி கேட்ட போது, “அந்தகாலத்தில் வாரத்துக்கு ஒரு முறை முத்துமாலை குகைக்கு வருவார். அவர் ஒரு வாரத்துக்கு ஒரு முறைதான் மேலே வருவார்கள். வரும் சமயம் 7 கல்களை எங்கள் பெரியவர்கள் கையில் கொடுத்து வைத்திருப்பார். அவர்கள் தினமும் ஒவ்வொரு கல்லாக வீசி எறிவார்கள். கடைசி கல் எறியும் போது 1 வாரம் முடிந்து விடும். அந்த சமயத்தில் மோசஸ் முத்துமாலை வந்து சேர்ந்து விடுவார்
என்றனர். அதை கேட்ட வுடன் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. கிறிஸ்தவ மதத்தினை பரப்ப அந்த மனிதர் பட்ட பாடு நெகிழ்ச்சியாக இருந்தது.
இதுபோன்ற பல நிகழ்வு பொதிகை மலையிலும் பழங்குடியினர் வாழ்வில் நடந்துள்ளன. அதற்காக நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்கள் வெளியிட்ட மேலும் இரண்டு வீடியோக்களை காணவேண்டும்.
(பொருநை ரகசியத்தினைதேடிபயணிப்போம்)


