திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவில்களான சிவன் கோவில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி நாளை (புதன்கிழமை) யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், அதன் உப கோவில்களிலும் திருப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தூண்டுகை விநாயகர் கோவிலில் கடந்த ஏப்.20-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
அடுத்த கட்டமாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோவில், வெயிலுகந்தம்மன் கோவில், அமிர்தகுண விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ சொர்ணமகா சாஸ்தா கோவில்களில் வருகிற 6-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக அந்தந்த கோவில்களில் கும்பாபிஷேகத்திற்கான பந்தல் கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ளது. இதையொட்டி சிவன் கோவிலில் நேற்று மங்கள வாத்தியத்துடன் பூஜைகள் தொடங்கியது. இதில் திருமுறைபாராயணம், விநாயகர் பூஜை, புண்யாயவாசனம், பஞ்ச கவ்ய பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்திட சுவாமி அம்மனிடம் உத்தரவு பெறும் தேவதா அனுக்ஞை பூஜைகளை ஸ்ரீ ஷண்முகா பூஜா கைங்கர்ய ஸ்தானத்தார் சிவாச்சாரியர்கள் செய்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் தக்கார் அருள்முருகன், விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், உதவி செயற்பொறியாளர் சத்யன், மணியம் நெல்லையப்பன், மஹாராஜா சுப்பையன் அய்யர், மடப்பள்ளி அய்யப்பன் அய்யர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் வெயிலுகந்தம்மன் கோவிலில் நேற்று காலை அனுக்ஞை பூஜைகள் நடைபெற்று, மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து யானை மீது ஊர்வலமாக வந்து பூஜைகள் நடந்தது. பூஜைகளை பார சைவ பூஜா ஸ்தாணிகர்கள் செய்திருந்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


