தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி குறிஞ்சி நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் மகன் வெங்கடாச்சலம் (75). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி 2 மகள்களை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இவரது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் செல்வகுமார் என்பவர் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வெங்கடாசலம் இறந்து கிடந்தது தெரியவந்தது.
அழுகிய நிலையில் இருந்த அவரது சடலத்தை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வயோதியம் காரணமாக இறந்தாரா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


