தூத்துக்குடி மாவட்டத்தில் பப்பிராபள்ளி மரம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தினை உருவாக்கிய ஒன்று. அந்த தாக்கம் என் மனதில் உருவாகி உள்ளது. தூத்துக்குடியில் வெளிநாட்டினரின் தொடர்பால் மக்களிடையே நிகழும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் ஒருபுறமிருக்கத் தாவரங்களும் விலங்குகளும் கூட அறிமுகமாகின. தமிழ்நாட்டில் அரேபியர்களால் கொண்டு வரப்பட்ட ஒரு மரம் தான் பெருமரம். இம்மரம் பெருக்கமரம் பே(ய்)மரம். பாப்பிரப்புளி, பேப்புளி, ஆனைப்புளி, என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இம்மரத்தை ஆங்கிலத்தில் Bav Bab என்றும் Monkey-Bread tree என்றும் குறிப்பிடுகின்றனர். இதன் இலைகள் பெரியதாகவும் மென்மையாகவும் இருக்கும். ஆடன்சன் (Adanson) என்ற பிரெஞ்சு தாவரவியலாளரின் பெயராலும் விரல் போன்று(Disgiyaye) இதன் இலை இருப்பதன் அடிப்படையிலும் Adansonia Digitara என்று இம்மரம் தாவரவியலாளர்களால் அழைக்கப்படுகிறது. இம்மரம் வளரும் போது இதன் பட்டையும் கீழ்நோக்கி வளர்ந்து கொண்டே செல்வதால் இதன் சுற்றளவு பெருகிக் கொண்டே இருக்கிறது. ஐயாயிரம் ஆண்டுகள் வரை இம்மரத்தின் ஆயுள் உள்ளதாக ஆடன்சன் கூறுகிறார். இம்மரம் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்ததாகக் கௌன் கூறுகிறார்.

இந்தியத் தொழில் ஆய்வு நிறுவனம் The usefule plants of India (1992) என்ற நூலில் இம்மரத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்.ஏ.வி மேனிலைப்பள்ளியிலும், புதியம்புத்தூர் செல்லும் சாலையில் புதூர் பாண்டியபுரம் என்ற கிராமத்திலும் இராசாவின் கோவில் என்ற ஊரிலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் பங்களா வளாகத்திலும் இம்மரம் உள்ளது. பழைய காயலில் இதுபோன்ற மரம் உள்ளது என பல குறிப்புகளில் படித்தேன். தற்போது எங்குள்ளது என்ற தகவல் எனக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையில் இந்த மரம் தனியார் தோட்டத்துக்குள் இருந்ததாகவும். அதன் அருமை புரியாமல் அந்த மரத்தினை அதன் உரிமையாளர் வெட்டி விட்டதாகவும் ஒரு தகவல் எனக்கு கிடைத்தது.
குலசேகரப்பட்டினம், சிவன் கோயில் அருகில் பப்பரபள்ளி மரம் இருந்தது. அந்த மரம் தற்போது சாய்ந்து விட்டது. இந்த மரத்தினை பற்றி நான் குங்குமம் வார இதழில் காதலர் மரம் என்ற தலைப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தேன். இந்த மரம் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ள மரமாகும். இதன் சுற்றளவு ஆறு பேர் கட்டிப்பிடிக்கும் அளவுக்கு பெரிய அளவில் இருந்தது. இந்த மரங்களை சுமார் 1000 வருடங்ககளை கடந்த மரம் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒரு காலத்தில் குலசேகரப்பட்டினம் மிகப் பெரிய துறைமுக பட்டினமாக இருந்துள்ளது. அப்போது, ஆப்பிரிக்கா கீழக்கரை துறைமுகத்துடன் இத்துறைமுகம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. அப்போது ஆப்பிரிக்காவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது, இந்த மரத்தின் விதை விழுந்திருக்க வேண்டும் என்று சிலர் நம்புகிறார்கள். இல்லை. இல்லை.ஆப்பிரிக்காவில் இறந்தவர்களை புதைத்து அதில் மரம் நடுவது வழக்கம். அதுபோல இங்கு வந்த ஆப்பிரிக்க காதலனும், காதலியும் இறந்து விடவே அவர்களை புதைத்து இரண்டு விதையை தூவி இருக்கலாம். அதுதான் இந்த மரம் என்கிறார்கள் வேறு சிலர். இதனால் இந்த பகுதிக்கு வரும் காதலர்கள் தங்கள் பெயரை இந்த மரத்தில் எழுதி வைக்கிறார்கள். இந்த அரிய பொக்கிஷம் பாழாகி விடக்கூடாது என்பதற்காக இவ்வூரை சேர்ந்த சங்கரன் பிள்ளை இதைச் சுற்றி சுற்றுப்புறச்சுவர் கட்ட ஏற்பாடு செய்து வந்தார். அதற்குள் இந்த மரமும் பட்டு போய் தனது ஆயுளை முடித்துக்கொண்டது. இது குறித்து மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தாவரவியல் துறைத்தலைவரோடு பேசினேன். எப்படியாவது இதன் கன்றுகளை நட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கான முயற்சி எடுப்பதாக என்னிடம் கூறினார்.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பங்களாவில் இரண்டு மரம் உள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதியுடன் அவர் இல்லத்தில் உள்ள இந்த மரங்களை காணச்சென்றோம். மிகப்பிரமாண்டமாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் நான் புதிய பப்பரபள்ளி மரம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்குநிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த மரங்களின் விதைகளை எடுத்து புதிதாக மரங்களை உருவாக்க மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் முயற்சி செய்து பப்பரபள்ளி மரத்தின் கன்றுகளை உருவாக்கி இருந்தார். இதில் இவர் உருவாக்கிய ஒரு மரக்கன்றை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் நட்டு வளர்த்து வருகிறார். மேலும் இரண்டு கன்றுகளை மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளர் வேல் முருகன் அவர்களிடம் கொடுக்கச்சொல்லியிருந்தார். ஆட்சித்தலைவரின் உதவியாளர் முத்துகுமார் அந்த மரக்கன்றுகளை கிராமஉதயம் நிறுவன மேலாளர் வேல்முருகனிடம் ஒப்படைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முயற்சியால் தற்போது பப்பரபள்ளி மரத்தினை மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் நிறுவனம் வளர்க்க ஏற்பாடு செய்து வருகிறது. பழமையை காப்பாற்றவும், பழமையை புதுமையாக புகட்டவும் ஏற்பாடு செய்து வரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து இந்த மரங்களை அழியாமல் பாதுகாப்பது நம் கடமையாகும்.


