தூத்துக்குடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று துவக்கி வைத்து பேசுகையில், இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சம்மேளனத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த மாவட்டத்திலும் நடக்காததை நடத்தி காட்டுவது தூத்துக்குடி மாவட்ட மக்களின் பெருமை.
கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு வெளியரங்க மற்றும் உள்ளரங்க விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாமல் இருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். இந்நேரத்தில் மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெறுவது சிறந்தது என்று கருதுகிறேன்.
நகரின் மைய பகுதியில் அமைந்திருக்கின்ற காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டு கடந்து வருவதையொட்டி 100 அணிகள் கொண்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். டென்னிஸ் பால் கிரிக்கெட் எல்லோரும் விளையாடி இருப்பார்கள். இந்த போட்டி மிகவும் பிரபலமான போட்டியாகும். நானும் விளையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறேன். தெரிந்திருந்தால் நானும் கலந்திருப்பேன். தற்போது மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்று வருகிறது. இனி வரும் காலங்களில் மாநில அளவிலான போட்டிகள் நடத்தினால் அதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று நடைபெறுகின்ற விளையாட்டு போட்டியில் திருச்செந்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடியில் இருந்து அதிகமான அணிகள் கலந்துகொண்டு இருக்கிறது. இப்போட்டிகளில் பங்கு பெறும் அனைத்து அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஐபிஎல் வந்த பிறகு நிறைய மாற்றம் வந்திருக்கிறது. டென்னிஸ் பந்தில் விளையாடி வந்தால்தான் பால் போட முடிகிறது என்று நிறைய பவுலர்கள் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு செயலை செய்தாலும் விருப்பத்துடன் செய்ய வேண்டும் என கூறிக்கொண்டு மீண்டும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்;டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டி.வி.பேட்ரிக், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், வார்டு உறுப்பினர் ரெக்சிலின் சூசை அந்தோணி, காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முனைவர்.சேவியர் ஜோதி சற்குணம், செயலாளர் செல்வராஜ், முதல்வர் கணேசன், தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சம்மேளன கண்காணிப்பாளர் முனைவர்.வி.பெரியதுரை, பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.


