கோடைகால விடுமுறை வழங்கக்கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் ஒரு மாத கோடைகால விடுமுறை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்க வேண்டும். 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும்போது கருணைத் தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் ஜெயராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாநில துணைத் தலைவர் சிங்காரவேலு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


