தூத்துக்குடியில் புனித வெள்ளியை முன்னிட்டு, பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் அனுசரிக்கும் தவக்காலம், கடந்த பிப்ரவரி மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான புனித வெள்ளியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் சிறப்புச் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெற்றன.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில், இயேசு கிறிஸ்து சிலுவையைச் சுமந்து செல்லும் உருவச் சொரூபம் ஏந்தி, பேராலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்தப் பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு உருக்கத்துடன் பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஆலயப் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தூத்துக்குடி திருஇருதய ஆலயத்தில், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிலுவைப் பாதை மற்றும் சிறப்புப் பாடுகள் தியான வழிபாடுகள் நடைபெற்றன. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் திரளான மக்கள் பங்கேற்ற நிலையில், வழிபாடுகளுக்குப் பின் ஆலய நடை சாத்தப்பட்டது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு அனைத்துத் தேவாலயங்களிலும் ‘பாஸ்கா’ திருவிழிப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறவுள்ளன.


