தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வாரத்தை முன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் எளிமையைப் பறைசாற்றும் ‘பாதம் கழுவும் நிகழ்ச்சி’ நேற்று நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, தனது 12 சீடர்களுடன் அமர்ந்து இறுதி உணவு அருந்தினார். அப்போது, ஒருவருக்கொருவர் அன்பு செய்து தாழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் சீடர்களின் பாதங்களை இயேசு கழுவினார் என்று விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் புனித வியாழக்கிழமையன்று இந்தச் சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் ‘சின்னக்கோவில்’ என்று அழைக்கப்படும் திரு இருதயப் பேராலயத்தில், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் போது, இயேசுவின் போதனையைப் பின்பற்றி 12 முதியவர்களின் பாதங்களை ஆயர் கழுவி முத்தமிட்டார். பின்னர் அவர்களுக்குப் புனித ரொட்டிகளையும், சிறப்புப் பரிசுப் பொருட்களையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர். இயேசு கிறிஸ்து உயிர்நீத்த தினமான புனித வெள்ளி இன்று (ஏப்ரல் 3) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்துத் தேவாலயங்களிலும் சிறப்புச் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து, வருகிற ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.


