வல்லநாட்டில் வனத்துறை சார்பில் உலக காட்டுயிர் தினம் கொண்டாடப்பட்டது.
அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி உலக காட்டுயிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே வெளிமான்களுக்கான தனியாக இருக்கும் ஒரு சரணாலயம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ளது. இங்கு 250 க்கும் மேற்பட்ட வெளிமான்கள், மிளா, புள்ளி மான், முயல் போன்ற விலங்குகளும் 100க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், 80க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களும் உள்ளன. மேலும் பல வகையான தாவரங்கள், ஊர்வன வகை விலங்குகள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தனித்துவம் வாய்ந்த சூழலியல் தொகுதியாக வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம் விளங்குகிறது.
இந்த சரணாலயம் மற்றும் அதில் உள்ள உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கடந்த ஒரு வார காலமாக சுற்றியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வைத்து களப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நான்கு பள்ளிகளைச் சார்ந்த 150 மாணவர்கள் இந்த களப்பயிற்சியில் கலந்து கொண்டனர். அவர்களை காட்டு வழிப் பாதையில் அழைத்துச் சென்று அங்குள்ள வெளிமான்கள் காண்பிக்கப்பட்டது. இந்த களப்பயிற்சியின் நிறைவு நாள் மற்றும் காட்டுயிர் நாளை முன்னிட்டு இன்று வல்லநாடு மலை அடிவாரத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த கையேட்டை வெளியிட்டார். காட்டுயிர் தினத்தினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பறவைகள் புகைப்பட போட்டியும் நடத்தப்பட்டது. புகைப்பட போட்டியின் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கிள்ளிகுளம் வேளான் கல்லூரியின் தலைவர் முனைவர் இறைவன் அருட்கனி அய்யநாதன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிசேக் தோமர் அவர்கள் காட்டுயிர் பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார். புகைப்பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
மணிமுத்தாறில் இயங்கிவரும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் மூத்த ஆய்வாளர் மதிவாணன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மரிய ஆண்டனி, முனைவர் தனிகைவேல், தமிழழகன் மற்றும் தன்னார்வலர்கள் வினோத் சதாசிவம், பால்மதி மற்றும் சங்கர் ஆகியோர் களப்பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கினர். கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு மலையேற்ற நிகழ்வு நடத்தப்பட்டது. துணை பாதுகாவலர் சக்திவேல் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வனச்சரகர் சுப்பிரமணியன், வனவர்கள் கேசவன், கண்ணன் மற்றும் வனப்பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.