கோவில்பட்டி அருகே மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறிதது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இடைசெவல் தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புலட்சுமி (55). இவா் கோவில்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வயிறு வலி காரணமாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் அவா் நேற்று முன்தினம் திடீரென மருத்துவமனையில் இருந்து காணாமல் போனாராம்.
இதுகுறித்து அவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்நிலையில் நேற்று இடைசெவல் கிராமத்தில் தனியாா் தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததாம். இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்டனா். விசாரணையில் அவா் காணாமல் போன சுப்புலட்சுமி என்பது தெரிய வந்தது. இது குறித்து நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


