ஆத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கீரனூர் பகுதியை சேர்ந்த வேலையா மகன் நாராயணகுமார் (44) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் சங்கரேஸ்வரன் (26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று அன்று நாராயணகுமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அவர்களது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மேற்படி சங்கரேஸ்வரன், அவரது உறவினரான கீரனூர் பகுதியை சேர்ந்த புதுராமன் மகன் ரமேஷ் (26) மற்றும் சிலர் சேர்ந்து நாராயணகுமார் மற்றும் அவரது மனைவியிடம் தகராறு செய்து அவர்களை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நாராயணகுமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார் சங்கரேஸ்வரன் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


