தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 24.56 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்து உள்ளது. முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இருந்து ராக்பாஸ்பேட் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சரக்குகள் கொண்டு வரப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதேபோன்று பல்வே நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு புளு அலெக்சாண்ட்ரா என்ற கப்பல் மூலம் 22 ஆயிரத்து 809 டன் ராக்பாஸ்பேட் கொண்டு வரப்பட்டது.
ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, இஸ்ரேல், லெபனான், டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இருந்து ராக்பாஸ்பேட் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மேலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நடப்பு நிதியாண்டில் நேற்று முன்தினம் வரை 24.56 மில்லியன் டன் சரக்குகளையும், 4 லட்சத்து 64 ஆயிரத்து 60 சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு சாதனை படைத்து உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 23.71 மில்லியன் டன் சரக்குகளையும், 4 லட்சத்து 36 ஆயிரத்து 761 சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு இருந்தது. தற்போது சரக்கு கையாளுவதில் 3.61 சதவீதம் வளர்ச்சியும், சரக்கு பெட்டகங்கள் கையாளுவதில் 6.25 சதவீதம் வளர்ச்சியும் பெற்று சாதனை படைத்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


