நெல்லை நகரில் உள்ள குறுக்குத் துறை முருகன் கோயில் புகழ் பெற்றது. இது தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இந்தக் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என நம்பப்பட்டது.
இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி மீனா இந்தக் கோயிலைத் தொல்லியல் ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் கோயில் அருகில் இரண்டு கல்வெட்டுக்களைக் கண்டறிந்தார்.
இந்த மாணவியுடன் படிக்கும் சக மாணவியர்களான சுகன்யா, பாரதி மற்றும் ரமணாவுடன் இணைந்து இந்த இரு கல்வெட்டுக்களையும் படி எடுத்தனர்.
முதல் கல்வெட்டுக் கோயில் அருகே உள்ள படித்துறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டின் மேல் பகுதியில்தான் இந்த முருகன் கோயிலின் படித்துறை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி மண்டபத்தின் தூண் அடியில் உள்ளது.
வெளியில் தெரியும் இந்தக் கல்வெட்டில் “ ண்டு கடமைக்குத்
மக்களுக்கும் பி
க்கும் சை
ளுக்கு அச்சு
ங்கள் கைய
கங் “
என்ற ஆறு வரி தகவல்கள் தற்கால தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முற்று பெறாத கல்வெட்டாகும். எழுத்தின் வடிவத்தின் அடிப்படையில் இந்தக் கல்வெட்டு 950 ஆண்டுகள் பழமையானது எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர்கள் முருகன் மற்றும் மதிவாணன் தெரிவித்தனர்.
இதுமாதிரி கோயில் உள்ளே உள்ள மண்டப தூண்கள் மற்றும் சுவர்ப் பகுதியில் 950 ஆண்டுகள் பழமையான பல வகையான கட்டிடக்கலை அங்கங்கள் மற்றும் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இந்த கோயிலின் கோபுரமும் கருங்கல்லால்தான் கட்டப் பட்டுள்ளது. இந்தக் கருங்கல் கோபுரத்திற்கு மேல் தற்போது தங்க நிற வர்ணம் பூசப்பட்டுள்ளதால் இதன் தொன்மையை உணரமுடியவில்லை.
இந்தக் கல்வெட்டும் கட்டிடக்கலை அங்கங்களும் கோபுரமும் இந்தக் கோயில் 950 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்துகின்றன.
இந்தக் கோயிலிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சிதிலமடைந்த ஒரு மண்டபம் உள்ளது. இங்கு இரண்டாவது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு
“பிலம்பலும் இரண்டு
நாதவ வாய்களுக்குக் கிழக்கு
ல்லை இகுலங்களில் நீர் நக்க
ல்லை இந்தபாரையின் நீரை அம்மடை
மடத்துத் திருவேங்கடம் எல்லை”
என்ற ஆறு வரிகளைத் தன்னிடத்தே தாக்கியுள்ளது. இந்தக் கல்வெட்டு ஆற்றுத் தண்ணீரைப் பிரித்து மடை மூலம் கொண்டு செல்வதை விளக்குகிறது.
இதுவும் ஒரு முற்றுப் பெறாத கல்வெட்டு. மேலும் 950 ஆண்டு பழமையான கல்வெட்டு என உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் மதிவாணன் தெரிவித்தனர்.
முருகன் கோயிலின் கருவறை ஒரு பாறையைக் குடைந்து சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் மண்டபமும் கோபுரமும் 950 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்ட நிலையில் இந்தக் கருவரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனக் கணிக்க முடிகிறது.
ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கோயில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தைத் தாக்குப் பிடித்து நிற்கிறது. அதாவது சுமார் 1000 வெள்ளப் பெருக்கை இந்தக் கோயில் தாக்குப்பிடித்துள்ளது.
“இத்தகைய பெருமையைப் பெற்ற இந்தக் கோயிலின் கட்டிக்கலை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் இந்தக் கட்டடக் கலை நுட்பத்தை உலகறிய செய்ய வேண்டும்” என்ற முனைப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது எனத் இந்தப் பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர் (பொறுப்பு) சி.சுதாகர் தெரிவித்தார்.
இந்தத் தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவியையும் பேராசிரியர்களையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சந்திரசேகரும் பாராட்டினார்கள்.


