“ஆச்சி சொல்ற கதையெல்லாமே சிறப்பாத்தான் இருக்கு”.
“ஊறுக்கு ஒரு சுடலை இருக்காரு. அவரு கதையெல்லாம் எப்படித்தான் தெரிஞ்சு வச்சிருக்காளோ”. ராசுக்குட்டி யோசித்தான்.
“இங்க தான இருக்கா. காலையில எழுந்திருக்கா. ஆட்டை பத்திட்டு போறா. ஆத்துல குளிக்கா. அப்புறம் புல்லருக்க போறா. சில நேரம் களை பறிக்க போவா. மதியம் வீட்டுக்கு வந்து மாட்டுக்கு தண்ணீ காட்டுவா. நல்லா தவிட்டை கொளப்பி வைச்சி, அழகா டேஸ்டா மாட்டுக்கு கொடுப்பா”.
“நம்ம யாரும் தவிட்டை கொளப்பி வைச்சா மாடு பரபரக்க முழிக்கும். Êசாப்பிடவே சாப்பிடாது. இவ வைச்சா கபுக்கு கபுக்குன்னு சாப்பிடும்”. ராசுக்குட்டி யோசனை பலவாறாக சென்றது.
ஆச்சிகிட்டே கேட்டே புட்டான். “ஆச்சி. நீ வச்சா மட்டும் சாப்பிடுது. மத்தவிய வைச்சா மாங்கு மாங்குன்னு முழிக்குது” என்றான்.
ஆச்சி சிரித்தாள். பதில்சொல்ல வில்லை.
ஒரு நாள் மாட்டுக்கு ஆச்சி வைச்ச தவிட்டை ஒரு வாய் எடுத்து வாயில் போட்டு பார்த்தான். நல்லாத்தான் இருந்தது. சொல்லப்போனா அம்மா வைக்கிற சாப்பாடு ஒரு ருசின்னா . இது தனி ருசி. இது ஆச்சியோட கைவண்ணம்.
“சரி இந்த ரகசியத்தை எப்படியாவது கேட்டு விடவேண்டும்” என நினைத்தான்.
அன்று இரவு.
“ஆச்சி நீ கதை சொல்றது எல்லாம் இருககட்டும். மாட்டுக்கு எப்படி தவிடு வைக்க அதை மட்டும் சொல்லு”.
“ஏலேய் அதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்?. அத வைக்கேன் அவ்வளவு தான். அது நல்லா இருக்கு இல்லேன்னு எனக்கு எப்படில்லே தெரியும்?”. ஆச்சிஅப்பாவியாக பதில்சொன்னாள்.
“ஆச்சி. நீ மாட்டுக்கு வைச்ச தவிட்டை நான் தின்னு பாத்து இருக்கேன் . நல்லா ருசியா இருக்கும்”. பல்லை காட்டினான்.
“அடே பேதில போவான். மாட்டுக்கு வைக்கிறதை தின்னு பாத்தியா? இது என்னல பழக்கம்”. ஆச்சி கடிந்துகொண்டாள்.
“பொறவு நீ வச்சா மாடு சப்பு கொட்டி திங்குது. மத்தவிய வைச்சா பரக்க பரக்க முழிக்குது என்ன ஏதுன்னு பாக்க வேண்டாமா? அதான் பாத்தேன்”. ஆச்சரியமாக கேட்டான்.
“ஏலே இன்னைக்கு நேத்து இல்லை. மாட்டுக்கு அந்த காலத்தில வைக்கிற தீவனத்தை நம்ம ஆளுக பண்டமாத்தர்ன் சாப்பிட்டு இருக்காவ”.
“அப்படியா?”
“ஆமாம் தின்வேலியில அல்வா கேள்வி பட்டுருக்கியா?”
“ஆமாம் நம்ம வீட்டில யாருக்கும் வயித்தால போனா , அப்பா வாங்கி கொண்டு தருவாவ”.
“ஆமாம் அந்த அல்வா உருவானதே ஒரு தொழுவத்துல த்தான் தெரியுமா?”
“ என்ன ஆச்சி சொல்லுத”.
“உண்மைத்தான். அதைப்பத்தி சொல்லுதேன் கேளு”. ஆச்சி திருநெல்வேலிக்கு அல்வா வந்த கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
“சொக்கம்பட்டி ஜமீன் ஒருத்தர் இருந்து இருக்காரு. அவருக்கு நிறைய படை பலன் எல்லாம் இருந்து இருக்கு. அவரு தன்னோட குதிரைக்கு கொள்ளு வைக்க வட நாட்டுல இருந்து சேட் குடும்பத்தை கூட்டிட்டு வந்து இருக்காரு”.
தொடர்ந்தாள் ஆச்சி சொக்கம்பட்டி வரலாற்றை.
அந்த சேட் லாலா குடும்பத்தை சேர்ந்தவரு. அவரு சொக்கம்பட்டி ஜமீன் குதிரை லாயத்துல வேலைக்கு சேந்து இருக்காரு.
அவரு தினமும் குதிரைக்கு வித்தியாசம் வித்தியாசமாக கொள்ளு கலவை செஞ்சுவச்சிருக்காவ.
இதனால குதிரை நல்லா வீரியமா இருந்து இருக்கு. போருக்கு குதிச்சி கிளம்பி போயிருக்கு.
இதுக்கிடையில சொக்கம்பட்டி ஜமீன் கொஞ்சம் கொஞ்சமா சரிஞ்சி போயிட்டாவ. அரண்மனை இடிஞ்சு போச்சு. வெள்ளைகாரங்க இவியள ஒட ஓட விரட்டிட்டி அடிச்சாவ. அதனால இவுகளும் ஆட்சியை இழந்த நிம்மதியில்லாம காடு மேடா அலைய ஆரம்பிச்சிட்டாவ. ராஜாவே ஓடிப்போயிட்டா கூலி காரவிய என்ன செய்யவவா. லாலா சேட்டும் தின்ன வேலி பக்கம் வந்துட்டாரு. அவுக அங்க கொள்ளு செய்ற மாரி அல்வா தயார் செஞ்சு இருக்காவ.
தாமிரபரணி தண்ணீ சுவையும் அதுகூட சேந்து போச்சி .இதனால தின்னவேலி அல்வா ரொம்ப பேமசா போயிட்டு. இன்னைக்கு ஊர் உலகத்தில தின்னவேலி அல்வான்னா எல்லாரும் அடிச்சிட்டு புடுச்சிட்டு சாப்பிடுதாவ. தின்னவேலியில இந்தமாரி கடை வைச்சிருந்தா அதை லாலா சுவிட் கடைன்னு சொல்லுதாவ. இன்னைக்கும் நம்ம ஊருக்கு பெருமை சேக்கிறதே அல்வாத்தான். பாத்தியா. அந்த அல்வா குதிரைக்கு வைக்கிற கொள்ளு மூலமாத்தான் பொறந்து இருக்கு”.
ஆச்சி அல்வாவரலாற்றை சொல்லி முடித்தாள்.
“ஆச்சி நியூம் தவிட்டுல இருந்து ஒரு சுவிட் செய்யு. அதையும் பேமஸ் ஆக்கிருவாம். நானும் பார்வதி ஆச்சி செஞ்ச சுவீட்டுன்னு எல்லாருக்கிட்டேயும் சொல்லுதேன்”.
என்று சொல்லி சிரித்தான்.
“ஆமாம் இவரு பெரிய இவரு என்னை பேமஸ் ஆக்குவாரு”
ஆச்சிக்கு கோவம் வந்தது. ராசுக்குட்டியை செல்லமாக ஒரு தட்டு தட்டினாள்.
“சரி ஆச்சி இது கொசுரு கதையா இருக்கட்டும. எனக்கு இன்னும் ஒரு நல்ல கதையா சொல்லு”.
“சுடலை சாமி கதை சொல்லட்டுமா?” ஆச்சி கேட்டாள்.
“சொல்லு. சொல்லு சொல்லு” மிகவும் ஆர்வப்பட்டான் ராசுக்குட்டி.
ஆச்சி கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
“தாமிரபரணி ஆத்துல தான் சுடலை கோவில் ரொம்ப அதிகமாக இருக்கு. குறிப்பா ஊய்காட்டு சுடலை, பொழிக்கரை சுடலை, சீவலப்பேரி சுடலை, ஆழிகுடி மாரடித்தான் சுடலை, ஆறுமுக மங்கலம் சுடலை இப்படி நிறைய சுடலைக் கோவில் இருக்கு. இந்த ஆத்தங்கரை வழியாத்தான் மலையாள நாட்டில இருந்து சுடலை, புலையனை வதம் செஞ்சிட்டு வந்திருக்காரு.
சுடலைக்கு இன்னொரு பேரு முண்டன். தலையில்லாம முண்டமா வந்து தாமிரபரணி ஆத்தில விழுந்த காரணத்தினால, அந்த இடம் முண்டந்துறைன்னு சொல்லுதாவ. அவுக முதல் அவதாரம் எடுத்த இடம் ஊர்ககாடு தான்.
மலையாளத்தில மந்திரவாதி பெரும் புலையன் பெரிய மந்திரவாதி, இவன் தன்னோட மந்திர சக்தியால பலவிதச் சேட்டை செஞ்சிட்டு வந்தாரு. குறுநில மன்னர்கள் எல்லாரையும் ஆட்டிப்படைச்சிக்கிட்டு இருந்தான். அவன் மனைவி கற்பமா இருந்தா. அவள் பேருகாலம் காலம் வந்தது. ஆனா இவன் பண்ணின ஆட்டூழியத்துக்கு பயந்து யாரும் அவளுக்கு பேறுகாலம் பாக்க போவலை”.
ஆச்சி தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“உடனே புலையன் ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் கிட்ட போய், என் மனைவிக்கு பேறுகாலம் பார்க்க வான்னு கேட்டான் பெரும் புலையன். இசக்கியும் அவன் மனைவிக்கு பேறுகாலம் பார்த்தா. மாமரத்துக்கு அடியில் வைத்து பேறுகாலம் பாத்த போது பெரும் புலையனுக்கு அழகா பெண்குழந்தை பிறந்தது. மாமரத்துக்கு அடியில் இசக்கியம்மன் பேறுகாலம் பார்த்த காரணத்தினால் அந்தப் பெண் குழந்தைக்கு மா இசக்கி ன்னு பேரு வச்சான் பெரும்புலையன். அந்தப் பெண்ணை நல்லா வளர்த்தான் பெரும் புலையன். வெளிஉலகமே தெரியாமல் அரண்மனை வீட்டில் வைத்துப் பூட்டினான்.
இதுக்கிடையில பெரும் புலையனை வதம் செய்ய சுடலை பொறந்தாரு. அதுக்கப்புறம் செங்கோட்டை பகவதியம்மன் கோவிலில காவலாளியா இருந்தாரு. புலையனை வதம் செய்ய நாளும் நெருங்கிட்டு. சுடலை பகவதி கிட்ட மலையாளம் போவ அனுமதி கேட்டாரு. அனுமதி கொடுத்தாவ. சுடலை மலையாளத்தை நோக்கி கிளம்பினாரு. அங்க போன சுடலை பாம்பாட்டியாக வீதி வீதியாகச் சுத்தினாரு. அப்போ அரண்மனை மேலே நின்னு வேடிக்கை பார்த்த மாஇசக்கியை பாத்தாரு. சுடலை, இசக்கி மேலே காதல் கொண்டாரு. அதுக்கு பொறவு முதல் கட்டமாக அவள் மீது காதல் கணையை வீசினாரு. அதைப் புரிஞ்சிக்கிட்டா மாஇசக்கி. சுடலையை பாத்து “உமக்கு உயிர் மீது ஆசை இருந்தால் ஓடிரு” ன்னாள். “ஏன்?” ன்னு சுடலை கேட்டாரு. “என் தந்தை பெரும் புலையன் பெரும் மந்திரவாதி. நீர் என்னை நேசிப்பது தெரிந்தால் உம் தலையையே சீவி விடுவாரு” ன்னு பதில் சொன்னா”.
ராசுக்குட்டி ஆச்சி கதையை மிகவும் சுராஜ்யமாக ரசித்தான். ஆச்சி தொடர்ந்து கதை சொன்னாள்.
“ஆனா சுடலை விடலை. யாரும் நுழைய முடியாத அந்த கோட்டைக்குள் எறும்பு வடிவில் போயிட்டாரு. மாஇசக்கியை அடைஞ்சாரு. அவகூட சேந்து அவளை தாய்மை அடைய வைச்சிட்டாரு. கர்ப்பிணியான மா இசக்கி அதை வெளியே சொல்ல முடியாம தவிச்சா.
மந்திரவாதியை நேரில் சந்திச்சாரு சுடலை “உன்னைக் கொல்ல வந்தவன் நான். உன் அட்டூழியத்தை அடக்க வந்த சுடலை நான்தான்” ன்னு சொல்லி நேருக்கு நேர் போய் நின்னாரு. இரண்டுபேரும் நேருக்கு நேர் மோத தொடங்கினாவ. இரண்டு பேரும் தங்களோட திறமையை ஒருவருக்-கு ஒருவர் சோதிக்க நினைச்சாவ. அதில சுடலைதான் ஜெயிச்சாரு. அப்புறம் புலையனை வதம் செஞ்சாரு. இது ஒரு புறம் இருந்தாலும் அதுக்கு முன்னால சுடலையிடம் இருந்து தன்னைக் காப்பாத்திக் கொள்ளப் பல மந்திர தந்திரங்களைக் கையாண்டாரு புலையன். அந்த வேளையில் புலையன் பரண் மேலே பல மிருகங்களைப் பலியிட்டான். அதில் நிறைமாதக் கர்ப்பிணியான மாஇசக்கியைப் பலி கொடுத்தான்னு சொல்லுவாவ.
அந்த நேரம் ஒரு நாளிகை சிமினிக்குள் சுடலை அடைப்படணுமுன்னு சுடலையிடம் புலையன் கேட்டாராம். அதன்படி சிமினியில் அடைப்பட்ட சுடலையைத் தாமிரபரணியில் தூக்கி போட்டாவ. சுடலை இருந்த சிம்னி தாமிரபரணி வெள்ளத்தில அடிச்சிட்டு வந்துச்சு. ஊர்க்காடு பக்கத்துல ஆத்தில கண்ணாடி சோலைங்கிற இடத்தில அரண்மனை தோட்டத்தில அந்தச் சிமினி ஒதுங்கிட்டு. அப்போ ஊர்க்காடு ஜமீனா இருந்த கோட்டி லிங்க சேதுராயரும் சிவன் அணைந்த பெருமாள் சேதுராயரும் ஆற்றுக்குள்ள குளிச்சிட்டு கரையேறுனாவ.
அந்த நேரத்தில தங்க நிறத்தில் ஜொலித்த அழகானச் சிம்னியே பார்த்து அதைக் கையில் எடுத்தாவ. அந்தச் சிம்னி வெடிஞ்சிட்டு. அதிலிருந்து சுடலைத் தோன்றினாரு. நான் சுடலைமாடன் “என்னை இவ்விடத்தில் நிலையம் போட்டு வணங்கு” ன்னு அவருசொன்னாரு. அதிலிருந்து சுடலைக்கு நிலையம் போட்டு ஊர்காட்டுல வணங்க ஆரம்பிச்சிட்டாவ ஜமீன்தார்மாருவ”.
ராசுக்குட்டி சுடலை கதையை நன்றாக ரசித்தான். ஆச்சி தொடர்ந்தாள்.
“இங்குள்ளச் சுடலை வித்தியாசமான தோற்றத்தில் கொண்டைப் போட்டிருப்பாரு. கேரளாவில் இருந்து வந்தவர் அல்லவா? ஆகவே இவர் கேரள கொண்டை போட்டிருக்கிறாரு. ஊர்காடு சுடலைக் கோவிலில் யாராவது தப்பு செய்துவிட்டு சத்தியம் செய்தால் அவர்கள் பின்னாலேயே போய் விடுவாரு. அப்புறம் தப்புச் செய்தவர்களைப் படாத பாடு படுத்திபுடுவாரு. அதோட மட்டுமில்லாம நிலையம் கேட்டு அந்த ஊரிலேயே தங்கிடுவாரு. இப்படியே பல இடங்களில் ஊர்க்காடு சுடலை போய் உட்கார்ந்துட்டாரு”.
என்று சொல்லி முடித்தாள்.
ஆச்சி சொன்ன கதையை ஆர்வத்துடன் கேட்டான் ராசுக்குட்டி.
“சுடலை மாட சாமிக்கு என்னா வரலாறு இருக்கு” என ஆச்சரியமாக கேட்டவன்,
சிறிது நேரத்தில் நிலாவை பார்த்தபடியே அப்படியே தூங்கி விட்டான்.
மறு நாள் ஆச்சி இன்னொரு கதை சொல்லுவாள் என்ற சந்தோசம் அவன் மனதில் இருந்தது.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


