திருச்செந்தூர் துர்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் தெருவில் ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழா, நவராத்திரிவிழா, வருஷாபிஷேக உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகுவிமர்சையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு ஆடித்திருவிழா ஜூலை 30ம் தேதி துவங்கியது. இதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனையும், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சந்தனகாப்பு அலங்கார தீபாரானையும் நடந்தது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான நேற்று திருமால்பூஜை நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பகல் 12 மணிக்கு அம்பாளுக்கு மஹிஷாசுர மர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சிறப்பு ராகு கால பூஜை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதலும், அதனைத்தொடர்ந்து அபிஷேகமும், இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு படைப்பு தீபாராதனையும், காலை 7 மணிக்கு அன்னதானம் வழங்குதலும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


