கூவைகிணறு கிராமத்தில் சேதமான தரைமட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ரா.சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், அருகே கூவைகிணறு கிராமத்தில் 15 ஆண்டுகளாக சேதமாகி காணப்படும் தரை மாவட்ட பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ரா.சித்ராங்கதன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் இன்று மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சாத்தான்குளம் ஒன்றியம் கோமானேரி ஊராட்சி க்குள்பட்ட கூவைக்கிணறு பிராதான சாலையில் உள்ள வெள்ள நீர் செல்கின்ற பாலம் உடைந்து போய் 15 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இதனால் பல ஆண்டு காலமாக கோமானேரி ஊராட்சியைச் சார்ந்த பொதுமக்கள் இப்பகுதியை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த உடைந்துபோன பாலத்தை உயர் மட்ட மேம்பாலமாக கட்டித் தரக்கோரி ஊர் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தமிழக அரசும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், இதுபற்றி கண்டுகொள்ளாமல் மௌனம் காத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கோமானேரி ஊராட்சி கலுங்குவிளையில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக கண்டன தீர்மானத்தை முன்மொழிந்துள்ளனர்.
அதேபோல் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் இதேபோன்று குடிநீர் தட்டுபாடு, சாலைவசதி, போன்ற பல்வேறு பிரச்சனைக்கு உள்ளாகி அதற்கான தீர்வு கிடைக்கப்படாமல் கடும் விரக்தியில் உள்ளனர். இதனால் அவர்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் தற்போது உருவாகி உள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் பிரச்சனையின் தீவிரத்தை கருதி சாத்தான்குளம் பகுதியில் உள்ள கூவைக்கிணறு சாலையில் உள்ள வெள்ளநீர் செல்கின்ற பாதையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க உடனடியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் பொதுமக்களை தாங்கள் நேரடியாக சந்தித்து அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


