சாத்தான்குளம் அருகே வீட்டு பட்டா தொடர்பாக குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில், தாய் மற்றும் சகோதரியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கருவேலம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி செல்வகனி (80). இவருக்கு ராமச்சந்திரன் உள்பட 5 மகன், மற்றும் ராமக்கனி உள்பட 4 மகள் உள்ளனர். கணவர் தங்கவேல், கடந்த ஆண்டு இறந்து விட்டார். மகன் ராமச்சந்திரன், மெஞ்ஞானபுரம் அருகே வாகைவிளையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கருவேலம்பாட்டில் பெருமாள்சாமி கோயில் கொடைவிழா நடந்தது. இதையொட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினர் ஊருக்கு வந்திருந்தனர். அப்போது வீட்டு பட்டா தொடர்பாக குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராமச்சந்திரன், தனது தாயை அவதூறாக பேசி தாக்கினார்.
அப்போது தடுக்க முயன்ற அவரது சகோதரி ராமக்கனியையும் தாக்கியுள்ளார். காயம் அடைந்த தாய், மகள் இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்கு பதிந்து ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


