திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில், குழந்தை திருமணங்களைத் தடுக்கும் நோக்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட மகளிர் அதிகார மையம் சார்பில் திருக்கோயில் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருக்கோயில் அலுவலக கண்காணிப்பாளர் திருமதி ரோகிணி, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் திருமதி மேரி, சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி நிவேதிதா, நிதி கல்வி அறிவு வல்லுநர் திருமதி ஜெயலட்சுமி, சமூக நலத்துறை திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் திருமதி ஜெயசீலி மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர் திருமதி விக்டோரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, குழந்தை திருமணங்களின் பாதிப்பு மற்றும் அதன் சட்டபூர்வ தடை குறித்தும், அவ்வாறான செயல்கள் நடைபெறாமலிருக்க முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், குழந்தை திருமணம் அல்லது குழந்தைகள் மீதான ஏதேனும் அத்துமீறல் சம்பவங்களைத் தெரியப்படுத்த 1098 குழந்தைகள் உதவி எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூக நலன்களை வலியுறுத்தும் உரைகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.நிகழ்ச்சி இறுதியில், “குழந்தை திருமணம் இல்லா தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம்” என்ற உறுதிமொழி அனைவராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது.


