“ஆச்சி ராஜா கதை நல்லாத்தான் இருக்கு இதுபோல வேறு ஏதாவது கதை இருந்தா சொல்லேன்” ராசுக்குட்டி ஆச்சியிடம் கேட்ட போது, சலிப்பாக ஆச்சி சொன்னாள். “எத்தனை தடவை தான்டே கதை சொல்ல . கொஞ்சம் நிம்மதியாத்தான் இருக்க விடேன்” என்று ஆச்சி குறைப்பட்டுக்கொண்டாள்.
ஆனால் ராசுக்குட்டி விடவில்லை. “எனக்கு ராஜா கதை சொல்லு ஆச்சி” என்றான்.
“சரி ராஜா கதை என்றால் எல்லோருக்கும் சந்தோசம் தானே”. ஆச்சி கதை சொல்லட்டும் என எல்லோரும் காத்திருந்தார்கள்.
“7 கடல் தாண்டி 7 மலை தாண்டி அரண்மனை கட்டி கடலுக்குள்ள பாதுகாப்பா வாழ்ந்துகிட்டு இருந்தான் பரிசத் ராஜா. இவனுக்கு பாம்பு கடிச்சு சாகனுமுன்னு முனிவர் ஒருத்தர் சாபம் விட்டிருந்தார். அதானல தான் இந்த ஏற்பாடு”.
“7 கடல் 7 மலை தாண்டி கடலுக்குள் அரண்மனை இருக்கும் போது, அங்கு எப்படி பாம்பு போவும் அப்படின்னு எல்லாரும் நினைச்சாவ. ஆனா விதி யாரை விட்டது. பரிசத் மகராஜா பழத்தை கடிச்சு திங்கும் போது அதில புளு வடிவத்தில வாழ்ந்த நாகம் அவரை தீண்டியது. அவரு செத்தே போனாரு”.
ஆச்சி சிரித்தாள். “இது தான் கதை போது மா?”
ராசுக்குட்டிக்கு கோபம் வந்தது. “ ஆச்சிக்கு நிறைய கதை தெரியுது? அந்த இருமாப்பில கதை சொல்ல மாட்டுக்க ஆச்சி. பேசமா காதில போட்டுறுக நகையை பிடிச்சு இழுத்திற வேண்டியதுதான்”. என நினைத்தான்.
இவன் மனதுக்கு நினைத்தது. ஆச்சிக்கு மனதில் தெரிந்து விட்டது. “என்னலே கள்ளப்பயலை. என் காது நகையை பறிக்க பாக்கியோ. படுவா ராஸ்கேல்”.
“பொறவு என்ன செய்ய சொல்லுத ஆச்சி. நல்ல கதை சொல்லச்சொன்னா நீ 7 கடல் தாண்டி ராஜா இருந்தாருன்னு கதை சொல்லுத”.
“ஏலேய் அதுவும் கதைத்தான்டே. அது உனககு ரசிக்கலையோ?”.
“எனக்கு அதெல்லாம் வேண்டாம். அந்த கதை எல்லா வீட்டுல இருக்க ஆச்சியும் சொல்லுவா. நீ கொஞ்சம் வித்தியாசமாக சொல்லு ஆச்சி”.
ராசுக்குட்டிக்கு அழுகையே வந்தது. கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.
“ஏலேய் அழாதடே உனக்கு கதை சொல்லுதேன்”.
ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தாள். இந்த கதையில நாயகனுக்கு பேரு பேய்த்துரை.
“தலைவன்கோட்டைன்னு ஒரு ஊரு உண்டு. அது ஒரு பெரிய ஜமீனு. மிகப் பிரபலமாக பேசப்பட்ட ஜமீனுதான் ராமசாமிப்பாண்டியன். அவுகள பேய்த்துரைன்னு கூப்பிடுதாவ. அவுக வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் சும்மா திரிலிங்காவே இருக்குமுடே. இவரு பண்ணுறது எல்லாமே சிரிப்பா இருக்கும். ஆனா கடைசியில மக்களுக்கு தேவையானதா இருக்கும்”.
“ஒரு சமயம் ஊர்மக்க அனைவரையும் கூட்டிகிட்டு ஒரு இடத்தில் தடுப்பணை அமைக்க போயிருக்காவ. இவரு பேச்சை கேட்டு எல்லாரும் மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சி இருக்காவ. வேலை செய்த எல்லாருக்கும் ராஜாவுக்கு கிறுக்கு பிடிச்சிட்டோன்னு மனசுக்குள்ள நினைச்சி கிட்டாவ. ஆனா வெளியே சொல்ல முடியலை”.
“ஊர் மககளை வச்சி பெரிய ஊரணி ஒண்ணு தோண்டி முடிச்சிட்டாரு.
இந்த மனசனுக்கு கிறுக்கு பிடிச்சு போச்சா. வானம் பாத்த பூமியில இப்படி மனசங்களை போட்டு பாடாப்படுத்திக்கிட்டு இருக்காவ என எல்லோரும் வாப்பாறுனாவ. ஆனா யாரும் பதில் பேசலை.
ஊரணியை தோண்டி முடிச்சாச்சு. “எதுக்கு தோண்டினோம் என தெரியாமலேயே எல்லோரும் அவுக அவுக வேலையை பார்கக ஆரம்பித்தாங்க” ஒரு நாளு.. பேய் மழை பெஞ்சுது. அவர் தடுப்பணை கட்டின காரணத்ததினால் ஆற்றில் அம்போன்னு தண்ணீர் போவல, இவரு வெட்டி வஞ்ச ஊரணிககுள்ள தண்ணீ தேங்கி நின்னுச்சு. அது மட்டுமா எல்லா ஊருலேயும் தண்ணீ பஞ்சம் இருந்துச்சாம். ஆனா தலைவன் கோட்டையில மட்டும் விவசாயத்திற்கு வந்து சேர்ந்துச்சாம். இதனால் மக்கள் சந்தோஷமடைஞ்சாங்க. இதுபோல பல சம்பவங்கள் பேய்த்துரை வாழ்க்கையில் நடந்து இருக்கு”.
“நல்லா இருக்கே அப்பும் இந்த பேய்த்துரை மந்திரவாதியா? பின்னால வருதது முன்னாலே தெரியுது?” ராசுக்குட்டி சிரித்தான்.
“அப்படித்தான் வச்சிகோயேன்”. சிரித்தாள் ஆச்சி.
தொடர்ந்து பேய்த்துரை வரலாற்றை கூற ஆரம்பித்தாள்.
“வைக்கோல் படப்புகளைப் பார்த்தால் போதும் இந்த மகாராஜாவுக்கு மகிழ்ச்சி. அதைப் பார்த்து கொண்டே இருப்பார். திடீரென்று அவருக்கு ஒரு எண்ணம் வரும். இந்த படப்பு முழுவதையும் தீ வைத்துக் கொளுத்தினால், அது எரிவதைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்றும் நினைப்பார். நினைத்துப் பார்ப்பது மட்டுமல்ல தன் ஆட்களை வைத்து ஆணையும் பிறப்பிப்பார். குறிப்பறிந்த அந்த விசுவாசிகளும் உடனே அந்த வைக்கோல் படப்புக்கு தீ வைத்துக் கொளுத்துவார்கள்”.
“அச்சச்சோ”. ராசுக்குட்டி உச்சு கொட்டினார்.
“தீ எரிவதை ஆனந்தமாய் பார்த்துக் கொண்டிருப்பார் ஜமீன்தார். படப்பு எரிந்து முடிந்ததும் காரியஸ்தரின் முகத்தை பார்ப்பார். அவரோ, மகாராஜா இது பத்து வண்டி வைக்கோல் என்று சொல்ல, உடனே இருபது வண்டி வைக்கோல் வந்து அங்கு நிற்கும். வைக்கோலை இழந்தவருக்கு ஈடாக அதைக் கொடுத்து விடுவார். இப்படி எரிப்பதிலும் ஈடாக கொடுப்பதிலும் அவருக்கு அலாதியான சந்தோஷம். அப்படி ஒரு ரசனை அவருக்கு”.
“நல்லா இருக்கே பேய்த்துரை கதை. நம்மளும் இரண்டு மூணு வைக்கப்படப்பை காட்டலாம் போல” ராசுக்குட்டி சிரித்தான்.
“இவரு காலத்திலே இன்று ஜமீன்தாரின் கண்ணில் நமது படப்பு பட வேண்டும். இரண்டு மடங்காக கிடைக்குமே என மக்கள் அவரை விரும்பி எதிர்நோக்கிக் காத்து கிடப்பாக”
“அதிகாலையில் எழுந்து சாமி கும்பிட்டுட்டு, ராஜ உடையில் வெள்ளைக்குதிரை மீது ஏறி தினமும் கோவிலுக்கு போவது அவருடைய நித்திய காரியம். முதலில் தாருகாபுரத்திலுள்ள மத்தியஸ்த நாதர் கோவிலைக் கும்பிட்டு விட்டு தலைவன்கோட்டையிலுள்ள திருவாய் மொழி அம்மன் கோவிலுக்குப் போவார். ராஜ உடையுடன் நடந்தே கோவிலுக்குள்ள போவார்”.
“ எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஜமீன்தார் சிரித்துக் கொண்டே, இந்த ஜமீனும், ராஜ உடையும், குதிரையும், கடவுளால் எனக்கு வந்தவை. அதை தினமும் அவரிடம் காட்ட வேண்டாமா? அதுக்காத்தான் இந்த உடையிலே கடவுளை பார்க்க போறேன் என்பார்”.
“ஓ. நல்ல மனுசனா இருக்காரே. இவரை போய் பேய்த்துரைன்னு சொல்றாங்களே?”
“ஜமீன், கிராமங்களுக்கு அடிக்கடி போய் வருவா. இவுக பவனி வராவன்னா பொதுமக்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். யாராவது கஷ்டப்பட்டால் போதும். உடனே குதிரையை நிறுத்தி அவர்கள் கேட்கும் உதவியை உடனே செய்து கொடுப்பாரு. அவர் ஊர் சுற்றி பார்க்க வரும்போது பச்சைக்குழந்தைகளை மாத்திரம் அழவிடக்கூடாது. அப்படி ஏதாவது குழந்தை அழும் சத்தம் கேட்டா அவ்வளவு தான். உடனே அந்த வீட்டுக்குள் போய் குழந்தையைத் தூக்கிக் கொள்வார். பெத்தவளை கூப்பிட்டு எச்சரித்து விடுவார். சில வேளையில குதிரையைச் சவுக்கால் அடிப்பது போலேவே அந்த அம்மாவுக்கும் சவுக்கடி விழும். அடித்து விட்டு அரண்மனைக்கு கிளம்பும் போது பணமும் கொடுப்பார்”.
“அய்யோ இது பாவமில்லையா?”
“அப்படி ஒரு குணம் அவருக்கு. மனிதர்கள் அழலாம். ஆனால் குழந்தைகள் அழலாமா? குழந்தைகள் அழுவது கடவுள் அழுவதைப்போலத்தானே. என்று சொல்லுவார் ஜமீன்தார். ஜமீன்தார் வெளியே புறப்பட்டு விட்டால் போதும். பச்சைக்குழந்தைகள் வைத்திருக்கும் அனைத்து தாய்மார்களும் குலை நடுங்கிக் கொண்டிருப்பார்கள். எந்த நேரத்தில் பிள்ளை அழும் என்று சொல்ல முடியுமா?”
“அதானே. பிள்ளைக கிட்ட ராஜா வாராரு. அழாம இருன்னு சொல்ல முடியுமா?” ராசுக்குட்டி கதை கேட்கும் சுவராசியத்தில் ஜால்ரா போட்டான்.
“மத்தியஸ்த நாதர் கோவிலின் நிரந்தர தர்மகர்த்தா இந்த ஜமீன்தார். வைகாசி விசாகத்தன்று இந்தக் கோவிலில் தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடக்கும். அப்போது ராஜா உடையில் கம்பீரமாக அவரே வந்து, தேரை வடம் பிடித்து இழுப்பார். தேர் நிலையத்துக்கு வரும் வரை இரண்டு நாள் ஆனாலும், கூடவே அவரும் வருவார். தன்னைப்போல திருவிழவுக்கு வருகிற அனைத்து பேரும் தேரை சாப்பிடாமல் இழுக்க வேண்டும் என்பார். அப்படி ஒரு முரட்டு பிடிவாதம் அவருக்கு. முரட்டு பக்தியும் கூட. அதனால தான் சாப்பிடாம கொள்ளாம காத்து கிடப்பாரு”
“தேர் வரும்போது ஏதாவது மரக்கிளை தட்டி நின்று விட்டால், கொண்டு வா ரெட்டை குழல் துப்பாக்கியை என்று ஜமீன்தார் ஆணையிடுவார். ஆனால் அதற்குள் அவருக்கு தெரியாமல் மரத்தில் ஏறி அந்த கிளையை வெட்டி விடுவார்கள். துப்பாக்கி வர, அதைக்கொண்டு பேய்த்துரை அந்த கிளையைப் பார்த்து சுடுவார். முன்னமே கிளை வெட்டப்பட்டு விட்டதால் தடையில்லாமல் தேர் ஓடும். தன் துப்பாக்கி மகிமை என்று அவர் நினைத்துக் கொள்வார்”.
“சிரிப்பா இருக்கே. இப்படியெல்லாம் கோமாளி ராஜா இருப்பாவுளாக்கும்”. ராசுக்குட்டி சிரித்தான்.
“பூஜை புனஸ்காரங்களில் இந்த ஜமீன்தாருக்கு பெருத்த ஈடுபாடு உண்டு. அதுவும் மாதம் மாதம் பௌர்ணமி பூஜை செய்வது இவர் வழக்கம். பூஜை என்றால், ஏனோ தானோ என்று செய்து விடமாட்டார். பௌர்ணமியன்று தானும் தூங்கமாட்டார். அரண்மனையில் உள்ளோரையும் தூங்க விடமாட்டார். உண்ணாமல் உறங்காமல் ஒரு நாள் முழுவதும் பூஜை செய்வார். இப்படிச் செய்த பூஜையின் பலனாக சில சித்திகள் இவருக்கு உண்டு என்று பேசிக் கொள்வார்கள். இது போல எல்லா பூஜையும் இவர் செய்யும் செயலும் ஒண்ணு போலவே இருககும். வைககோல் போர் எரியும் போது அந்த நெருப்புல இறைவனை பார்ப்பாருன்னு சொல்லுவாவ. குழந்தை அழக்கூடாதுன்னு ஏன் சொல்லுதாவ தெரியுமா? அந்த குழந்தைதான் இறைவன் என்பார்”.
“இங்க பாருடா. ஆச்சரியமான ராஜாவா இருக்காறே?” ராசுக்குட்டி சிரித்தான்.
“இப்படி எல்லா வழிகளிலும் அதீதமான செயல்களைச் செய்து புகழ்பெற்ற இந்த ஜமீன்தாரை பேய்த்துரைன்னு எல்லோரும் செல்லமாக அழைப்பார்கள். இவர் காலத்தில் அந்த ஜமீன் மிகவும் சிறப்பாக இருந்ததாகப் பேசிக் கொள்கிறார்கள். பேய்த்துரை மீது ஈடுபாடு கொண்ட மக்கள் அவருக்கு ஒரு சிலை செய்து அதை அங்குள்ள திருவாய்மோழி அம்மன் கோவிலில் வைத்து தினப்படி பூஜை செய்துவாராக குறிப்பிடத்தக்கது. இன்றைய ஜமீன்தாரின் பேரனுக்கு பேய்த்துரை என்றே பெயர் வைத்து அவர் நினைவைக் கொண்டாடுதாவ”.
“ஒரு விஜயம் தெரியுமா? ஜமீன்தார் பேச்சும் செயலுமே வித்தியாசமா இருககும். அது உன் கிட்டே சொல்லுதேன் பாரு”
ஆச்சிக்கு அந்த நாள் தலையாரியும் பேய்த்துரையும் பேசிய காட்சிகள் மனதுக்குள் நினைவாக வந்தது.
“யாரது.?”
“மகாராஜா நான் தான் தலையாரி”.
“திருமால் சேர்வையா என்ன விஷயம்?”
“நம்ம ஜமீன் நிலத்துல யாரும் விறகு ஒடிக்கவோ, வேப்பம்முத்து பொறுக்கவோ கூடாதுன்னு மகாராஜா உத்தரவு”.
“ஆமாம் இப்போ அதுக்கென்ன?”
“அதை மீறி நம்ம முள்ளிக்குளம் கோனார் போத்தி சம்சாரம் விறகு ஒடிக்கிறாக, வேப்பம் முத்து பொறுக்குறாக?”
“சரி என்ன சொன்ன?”
“மகாராஜா உத்தரவைச் சொன்னேன்… மீறினால் தண்டனை கிடைக்கும் என்று சொன்னேன்”.
“அதுக்கு என்ன பதில் சொன்ன?”
“இது எங்க ஜமீன். எங்க ரெட்டக்குடையான் பூமி. எங்க இடத்தில் அப்படித்தான் பொறுக்குவேன் என்று சொன்னாள்”.
இதைக் கேட்ட தலைவன் கோட்டை ஜமீன்தார் ராமசாமி பாண்டியன் கலகலவென்று சிரிக்கிறார். “போத்தி வீட்டுக்காரங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. இந்த ஜமீன், குடிமக்களுக்கு சொந்தமானது தான். இதுபோல ஒவ்வொருத்தரும் இது நம்முடைய ஜமீன் என்று நினைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்”.
“மகாராஜா எனக்கு ஒன்னும் புரியலையே?”
“உனக்குப் புரியாது. எவ்வளவு பெரிய உண்மையை அந்த அம்மா சொல்லியிருக்கிறாள். சரி, போனால் போகட்டும். போத்தி சம்சாரம் உயிரோடு இருக்கும் வரை வருஷத்துக்கும் ரெண்டு ஜோடி சேலை ஜமீனிலிருந்து அனுப்ப வேண்டும்” என்று சொன்னார்.
எஸ்டேட் மேனேஜர் அழகுமுத்துப் பிள்ளையைக் கூப்பிட்டு அதற்கான உத்தரவையும் பிறப்பித்தார்.
ராசுக்குட்டிக்கு ஒண்ணுமே புரியலை.
ஆச்சித்தான் சொன்னாள். இது தான் தலைவன்கோட்டை ஜமீன் பேய்த்துரையின் பெருந்தன்மை.
இவர் வரலாறு எல்லாமே சுவராஜ்யமாகத்தான் இருக்கும்.
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)


