சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது. பள்ளி டிரஸ்டியும் டி.சி.டபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன், பள்ளி மாணவர்களின் மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ், நிர்வாகி வி.மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போப்ஸ் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவர் ஜெபராஜ் தேவதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். துணை முதல்வர் எஸ்.அனுராதா வரவேற்றார். தலைமையாசிரியர் ஸ்டீபன் பாலாசிர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். முதுகலை ஆசிரியர் டாக்டர் ஜான்சாமுவேல் எபனேசர் நன்றி கூறினார்.
கண்காட்சியில் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க சென்சார் தொப்பி, கைபேசி மூலம் வீட்டு உபயோகப் பொருட்களைக் கையாளும் கருவி, அணுமின் நிலையம், அடைகாக்கும் கருவி, அனல்மின் நிலையம், சொட்டுநீர் பாசனம், தெளிவு நீர் பாசனம், எரிமலை, ஆர்யபட்டா செயற்கைக்கோள், ஹைட்ராலிக் லிப்ட், பசுமை இல்ல செயல்முறை, போன்று பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இது காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் இருந்தது. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களும் காட்சி படுத்தப்பட்டிருந்தது.
கண்காட்சியில் டி.சி.டபிள்யூ. நிறுவன உதவித் தலைவர்கள் எஸ்.சுரேஷ், கே.மீனாட்சிசுந்தரம், பள்ளி டிரஸ்டியும் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த பொது மேலாளருமான பி. ராமச்சந்திரன், டி.சி.டபிள்யூ தொழிற்சாலை அதிகாரிகள், அலுவலர்கள், மற்றும் ஆறுமுகநேரி கே.ஏ.மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இந்து மேல்நிலைப் பள்ளி, வரண்டியவேல் இந்து நடுநிலைப்;பள்ளி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை அறிவியல் துறை ஆசிரிய, ஆசிரியைகள், செய்திருந்தனர்.