கோவில்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை செண்பகனேரி கிராமத்தில் இயங்கி வருகிறது. இன்று காலை 8 மணியளவில், சுமார் 25 தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு உற்பத்திப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆலைக்குள் வெடி விபத்து ஏற்பட்டது.
பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் சிதறியதில் தொழிற்சாலை கட்டிடம் சேதமடைந்தது. இந்த விபத்தில், விஜயாபுரி சமத்துவபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (27) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இடிபாடுகளில் சிக்கி பலத்த தீக்காயமடைந்த கணேசன் மற்றும் சுடலைமுத்து ஆகிய இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பாக நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


