தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் போளி, காயல்பட்டினம் தம்மடை உள்ளிட்ட தனித்துவமான 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் பூவிலான்செண்டு வாழை, கடம்பூர் போளி, அம்மன்புரம் மொந்தன் வாழை, கருங்கண்ணி பருத்தி, காயல்பட்டினம் தம்மடை ஆகிய 5 பொருட்களும் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் புவிசார் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் நபார்டு தமிழ்நாடு தென்மண்டல அலுவலக பொதுமேலாளர் ஹரிகிருஷ்ணராஜ், தூத்துக்குடி நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் சுரேஷ் ராமலிங்கம் மற்றும் விவசாய பிரதிநிதிகள், புவிசார் குறியீட்டு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.


