திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ரூ.1 கோடி மதிப்பீட்டில் 4 சிற்றுந்துகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தொடங்கி வைத்தனர்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் திருக்கோயில் வளாகத்தில் இன்று (13.11.2026), திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களை தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்குக் கட்டணமில்லாமல் அழைத்து வருவதற்காக ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் 4 சிற்றுந்துகள் (Mini Bus) பக்தர்களின் பயன்பாட்டிற்கு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சீ.ரமேஷ் , மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.
2026–27 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சட்டமன்ற பேரவையில், திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளுதல், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணிளை செய்தல், சிதிலமடைந்த திருக்கோயில்களைப் பழமை மாறாமல் புதுப்பித்தல், திருத்தேர்களை சீரமைத்தல், திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அன்னதானத் திட்டத்தை விரிவாக்கம் செய்தல் மற்றும் பணியாளர் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
“திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களைத் தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்குக் கட்டணமில்லாமல் அழைத்து வருவதற்காக, 4 சிற்றுந்துகள் (Mini Bus) ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும்” (அறிவிப்பு எண் 67) என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தற்போது கந்த சஷ்டிப் பெருவிழாவை முன்னிட்டும், திருக்கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவதாலும், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களை தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்குக் கட்டணமில்லாமல் அழைத்துச் வருவதற்காக ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில், சிட்டி யூனியன் வங்கியின் நிறுவன சமுகப் பொறுப்பாண்மைச் செயல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 4 சிற்றுந்துகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் பக்தர்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்கடவுள் முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான ஒன்றான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி பெருவிழாவான சூரசம்ஹாரமும் விழாவிற்கு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சூரசம்ஹாரமும் தேவையான அடிப்படை வசதிகளான திருக்கோயில் வளாகத்திலுள்ள 325 நிரந்தர கழிவறைகள், அது தவிர 300 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிரந்தர குளியலறைகள் 69 அமைக்கவும், அதுபோல நிரந்தரமாக 384 கண்காணிப்பு கேமராக்கள், தற்காலிகமாக 149 அதிநவீன தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் வசதிக்காக 23 தண்ணீர் பந்தல்களும் 68குடிநீர் குழாய்கள் நல்லிகள்),1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டிகள் 10 இடங்களில், 300 மி.லி குடிநீர் பாட்டில்கள் 6.இலட்சம் ஏற்பாடு செய்யவும் தீயணைப்புத் துறை 140 அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்கள் நிறுத்தவும்,
காவல்துறை 4ஆம் திருவிழா வரை 700 காவலர்கள்: 5 மற்றும் 6 ஆம் திருவிழா நாட்களில் 5,000 காவலர்களும், மேலும் மீன்வளத்துறை மற்றும் கடலோரக் காவல்துறை சார்பில் சுழற்சி முறையில் 5 படகுகள் மூலம் கடல் பகுதியில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளவும், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை (24 மணிநேரம்) கண்காணிக்கவும், அதுமட்டுமல்லாமல் திருக்கோயில் முதலுதவி மையம் , 6 இடங்களில் அரசு மருத்துவ முகாம்கள் இடங்களில் 2 தனியார் மருத்துவ முகாம்கள், 7 ஆம்புலன்ஸ்கள்
ORS கரைசல் வழங்கும் மையங்கள், 15 இடங்களில் (ம) அனைத்து தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பாதுகாப்பு பகுதிகளில் ஒளி கோபுரங்கள் -13, கண்காணிப்புக் கோபுரங்கள் 8 அமைக்கப்பட்டுள்ளன. 11 தற்காலிகக் கொட்டகைகளளும், நிரந்தரத் தங்குமிடங்கள் 5 தங்குமிட வசதிகளும், திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் – 11,500 நபர்கள், தன்னார்வலர்கள் மூலம் 15000 நபர்களும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்,
அது மட்டுமல்லாமல் முறை வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு பால், பொங்கல், பிஸ்கட் விரதமிருக்கும் பக்தர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு பால் மற்றும் பழம் வழங்க ஏற்பாடு, தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்களுக்கு நாள்முழுவதும் பிரசாதம் வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக அடிப்படை வசதிகள் தேவைகள் ஏற்பாடுகள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்பொழுது ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் விவரமாக அனைத்து துறை அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்படும். கட்டுப்பாட்டு மையங்களில் கண்காணிப்பு கேமரா, CCTV கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்மையங்களில் அனைத்து துறை அலுவலர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள், அது மட்டுமல்லாமல் Toll-free நம்பர் வழங்கப்பட்டுள்ளது. அதில் புகார் வரும் போது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 24×7 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு நாளை முதல் ஈடுபடுவார்கள்.
இப்பணி சூரசம்காரம் முடிந்து சாதாரண நிலை வரும்வரை தொடரும், அனைத்து வகையிலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொண்டுள்ளோம். எல்லாம் வல்ல தமிழர் கடவுளான முருகனின் பெருமையை, தமிழ் பெருமையும் உலகம் முழுவதும் சேர்க்கும் அளவிற்கு இந்த சூரசம்காரம் நிகழ்வு நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், முதலுதவி மையம், சூரசம்காரம் நடைபெறும் இடம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு அனைத்து துறை அலுவலர்களும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், திருச்செந்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் கௌதம், இணை ஆணையர்கள் அ.அருணாச்சலம், தி.சு.ரோஜாலி சுமதா உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், திருக்கோயில் உதவி ஆணையர் சி.லோகநாதன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் ஈழவேந்தன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


