தாமிரபரணி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், ஆத்தூர் தண்ணீர்பந்தல் தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கடம்பாகுளம் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுவதால் திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் ஆறுமுகநேரிக்கும், ஆத்தூருக்கும் இடையில் உள்ள தண்ணீர் பந்தல் தாம்போதி பாலத்தின் மேல் தண்ணீர் சென்றுகொண்டே இருக்கிறது. இதுவரை கடந்த ஒரு வாரமாக அந்த பாலத்தின் மீது அதிக அளவு தண்ணீர் சென்றுகொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக 2 தினங்கள் வாகன போக்குவரத்தை இந்த பாலத்தில் தடை செய்தனர்.
ஆனால் 3-வது நாள் மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக இந்த தாம்போதி பாலத்தில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகமானது. இதனால் மீண்டும் போக்குவரத்து தடை செய்யப்படுமோ? என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கவலை அடைந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் காவல் துறையின் கண்காணிப்பில் அந்த பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தடை செய்யப்படாமல் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வரிசையாக அனுப்பப்படுகிறது. இருசக்கர வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன.
ஆத்தூர் முக்காணி இடையிலான தாமிரபரணி ஆற்று பழைய பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றின் ஏழாவது அணை கட்டான மருதூர் அணையில் தாமிரபரணி நதி பொங்கிப் பெருகி பாய்கிறது. இன்று இரவு ஆத்தூரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


