டம் கேட்டேன். அதில் பாதி பேருக்கு இந்த கட்டிடத்தினை பற்றி தெரியவில்லை. சிலர் இதைப்பற்றி தெரிந்து சொல்கிறோம் என கூறினார்கள். ஆனாலும் எனக்கு இந்த படகு கட்டிடம் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தது.
குவைத் நகரத்தில் அரண்மனை ,அருங்காட்சிகம் உள்ள இடத்தில் தான் இந்த படகு கட்டிடம் பிரமாண்டமான இடத்தில் உள்ளது. நிச்சயம் இதற்கு வரலாறு இருக்கும் என நான் கூகுளில் தேடிப்பார்த்தேன்.
அதில் படகு பில்டிங் பற்றி பெரிதாக தெரியவில்லை. ஆனால் படகு பற்றிய ருசிகர சம்பவம் ஒன்று எனக்கு கிடைத்தது. ஆனால் அந்த வரலாறு சமீபத்தியதுதான். ஆனால் நமது தமிழர்களை பற்றியது. எனவே அதை இந்த இடத்தில் பதிவிடுகிறேன்.
கடந்த 2024 பிப்பிரவரி 7 ந்தேதி குவைத்தில் இருந்த தப்பி வந்த படகு மும்பையில் பிடிபட்டது. அதில் மூன்று தமிழர்கள் இருந்தார்கள் என்ற தகவல் தான் அது. ஆகா தற்போது தொலை தொடர்பு சிறப்பாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு ஒரு படகு தப்பி வந்ததா?. அதுவும் குவைத், சவூதி அரோபியா உள்பட பல நாடுகளை கடந்து இந்தியாவுக்கு தப்பி வந்த படகு பற்றிய அந்த சம்பவத்தினை ஆச்சரியத்துடன் அலசினேன்.
மும்பை காவல்துறையின் ரோந்துக் குழு 6.02.2024 செவ்வாய்க்கிழமை மாலை குவைத்தில் இருந்து வந்த படகை மும்பையில் அரபிக்கடலில் கேட்வே ஆப் இந்தியா அருகே தடுத்து நிறுத்தியது. மூன்று பேருடன் படகை இடைமறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

படகில் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்களோ, போதை பொருள்களோ அல்லது சமூக விரோதமான எதுவும் காணப்படவில்லை . தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தினை சேர்ந்த அந்தோணி , நிதிசோடிட்டோ, விஜய் அண்டனி ஆகியோர் அதில் இருந்தனர்.
அவர்களை கொலாபா காவல் நிலையத்தில் காவலில் வைத்த னர். அவர்கள் கொண்டு வந்த படகு குவைத்தை சேர்ந்தது. இந்த படகு கேட்வே ஆப் இந்தியாவில் பாதுகாப்பாக நிறுத்தபட்டது.
அவர்களை விசாரித்த போது, மூவரும் ஒரு குவைத்தில் உள்ள மீன்பிடி நிறுவனத்தில் பணிபுரிந்தனர் என்றும். அவர்களின் முதலாளியால் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறினர். நிலுவைத் தொகை மற்றும் சம்பளம் வழங்கப்படாததால், கடுமையான பணிச்சூழலுடன் காணப்பட்ட இவர்கள் எப்படியாவது தப்பித்து ஊருக்கு சென்று விட வேண்டும் என முடிவு எடுத்தனர். எனவே உரிமையாளருக்கு தெரியாமல் படகை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர். இவர்களின் பாஸ்போர்ட் முதலாளியிடம் மாட்டிக்கொண்டதாலும், முன்னறிவுப்பு இன்றி சட்டத்துக்கு விரோதமாக இவர்கள் படகு எல்கை தாண்டி வந்த காரணத்தினால் இவர்கள் படகை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
தொடர்ந்து 12 நாட்களாக இடைவிடாமல் பயணம் செய்கிறார்கள். உணவு பொருள்கள் 9 வது நாள் தீர்ந்து விடுகிறது. இதனால் அவர்கள் மூன்று நாள் சாப்பிடவில்லை. எனவே அவர்கள் மயக்கநிலையை அடையும் வேளையில் மும்பை வந்து சேர்ந்தனர்.
இவர்கள் நிலையை அறிந்து கன்னியா-குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், உடனே மும்பை சென்று இவர்களை காப்பாற்றி ஊருக்கு கூட்டிச்சென்றார்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக வந்துள்ளனர் .

எனவே இவர்களை முதலில் தீவிரவாதிகளாகவே விசாரித்தார்கள். குவைத் நாட்டு படகு கைப்பற்றப்பட்டு ஏழு மாதங்களுக்குப் பிறகு, அதன் உரிமையாளர் அப்துல்லா ஷராஹித்திடம் ஒப்படைக் கப்பட்டது.
3 பேரும் 10 நாட்களுக்கும் மேலாக படகில் பயணம் செய்து ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் மும்பையை அடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஒரு ஆச்சரியமான சம்பவம் தான்.
இந்த மூன்று பேர் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுத்து இருந்தால் கடுமையான தண்டனை கிடைத்து இருக்கும். ஆனால் இவர்கள் கையில் ஆயுதமோ அல்லது வேறு சட்டத்து விரோதமான எந்த பொருளும் இல்லாமல், பசி மயக்க நிலையில் தாயகத்தில் சொந்த பாஸ்போர்டை பறி கொடுத்த விட்டு வந்து இறங்கியது அவர்கள் மீது இரக்கத்தினை தான் ஏற்படுத்தியது.
நாங்கள் இந்த செய்திகளை அசைப்போட்டுக்கொண்டே குவைத் அரண்மனை முகப்பின் வழியாக அரசு அருங்காட்சியகம் வந்து சேர்ந்தோம்.
உள்ளே நுழையும்போது, அருங்காட்சியம் மூடும் நேரம் நெருங்கி விட்டது. சீக்கிரம் சுற்றிப்பார்த்து விட்டு வாருங்கள் என எங்களை அனுப்பி வைத்தார்கள், ஊழியர்கள்.
மிகப்பிரமாண்டமாக இருந்த அந்த இடத்தில் எங்களை பார்த்த ஆர்வத்தில் ஊழியர் ஒருவர் 2024 ல் குவைத் அரசு வெளியிட்ட குவைத் நேஷனல் மியூசியம் என்ற ஆங்கிலம் மற்றும் அரபில் எழுதப்பட்ட நூலை தந்தார்.
அந்த நூலில் குவைத் பற்றிய பல்வேறு சுற்றுலா தகவல்கள் இருந்தது. முதலில் அதை அசைப்போடலாம். அதன் பிறகு அருங்காட்சியகத்துக்குள் நுழையலாம் என நினைக்கிறேன்.
அந்த நூலில் நான் பார்த்து ஆச்சரியமுட்டிய தகவல் ஒன்று இருந்தது. இந்த அருங்காட்சியகம் 24.02.1983 அன்று திறப்பு விழா நடந்த புகைப்படம் ஒன்றை 5வது பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள். அதன் கீழே ஈராக் படையெடுப்பின் போது தரைமட்டமான இதே அருங்காட்சியகம் படத்தினை பதிவிட்டு இருந்தார்கள். பதைபதைப்பாக இருந்தது. இந்த அளவுக்கு உருக்குலைந்து போன மியூசியத்தினை மீண்டும் குவைத் அரசர் உருவாக்கியுள்ளார். இதை நினைக்கும் போதே மிகவும் பிரமிப்பாக இருந்தது.

இந்த அருங்காட்சியகத்தில் என்ன உள்ளது என்பதை அறியும் முன்பு இந்த நூலில் என்ன உள்ளது என்பதை அறியலாம் என நினைத்து நூலை புரட்டினேன். இந்த நூலில் குவைத் பற்றி பழமையான தொல்லியல் பொருள்கள் பல படமாக பதிவிடப்பட்டிருந்து. முன்பக்கத்தில் இருந்து பார்த்தால் ஆங்கிலத்திலும், நூலைபுரட்டி பின்புறத்தில் இருந்து பார்த்தால் அரபு மொழியிலும் இந்த நூல் எழுதப்பட்டிருந்தது.

குவைத் நகரின் முக்கிய தொல்லியல் ஆய்வு என்றாலும் , பராம்பாரிய மிக்க தகவல் என்றாலும், பழமையான பொருள்கள் உள்ள இடம் என்று நாம் தேடினாலும் நமக்கு பைலாகா தீவுத்தான் முதன்மை இடத்தினை பெறுகிறது.
பைலாகா தீவுக்கு சால்மியா என்ற இடத்தில் இருந்து படகு வழியாக செல்லவேண்டும். இந்த இடத்தில் சமீபத்தில் பூமிக்கு அடியில் மிகப்பெரிய எண்ணெய் கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே வரலாற்று முக்கியத்துவமான இடமாக இவ்விடம் கருதப்படுகிறது.
பைலாகா தீவு குவைத் நகரவாசிகளின் உதவியுடன் டேனிஷ் மிஷனால் 1960 இல் அகழ்வாராய்ச்சி செய்யப் பட்டது. இதில் ஹெலனிஸ்டிக் கோயில்/டெல் சாக்ட் கண்டுபிடிக்கப்பட்டது.
அரேபிய வளைகுடாவில் குவைத் ஒரு முக்கிய வரலாற்று இடத்தைக் கொண்டிருப்பதை பல தொல்பொருள் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன இது பைலாகா தீவில் உள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தீவு வளைகுடாவில் ஒரு முக்கிய இடத்தைப் பகிர்ந்து கொண்டது. மெசபடோமியா, சிந்து சமவெளி மற்றும் அரேபிய தீபகற்பத்தின் பிற இடங்களுக்கு இடையே கடல் வழிசெலுத்தல் மற்றும் வர்த்தக உறவுகளில் முக்கிய பங்கு வகித்தது. சிந்து சமவெளிக்கு இணையான தாமிரபரணி கரை ஆதிச்சநல்லூர் நாகரீகத்துக்கு இதற்கும் தொடர்ப்பு உண்டா?. தமிழர்களுக்கும் குவைத்துக்கு பல ஆண்டுகளாக தொடர்ப்பு இருப்பதால் இது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்பதை நாம் கோரிக்கையாக வைப்போம்.
தில்முன் நகரம், டார் அல் டெயாஃபா (அல் கான்), ஹெலனிஸ்டிக் கோட்டை, அல் ஹக்கிம் அரண்மனை, டெய்ர் அல்-பஹாரி, கோபுர கோவில், அல் குசூர், ஹெலனிஸ்டிக் சரணாலயம் ஆகும்.
இதுபோக பைலாகா தீவுக்கு வெளியே கஸ்மா, அல் சப்பியா, அக்காஸ் தீவு ஆகியவையும் தொல்லியல் அகழவாராய்ச்சி செய்யும் இடமாக கருதப்படுகிறது.
இந்த துறையில் தொல்பொருள் ஆய்வு மற்றும் அனுபவங்களின் பரிமாற்றம் இதுவரை குவைத் தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட்சிகளின் வரிசையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. பல தொல்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டள்ளது.
தில்முன் நகரத்தின் வான்வழி காட்சி (பைடகா லாலண்ட்). மனித எலும்புக்கூடு ஒரு புதைகுழியில் கற்காலத்திற்கு முந்தையது (அல் சப்பியா). ஹெலனிஸ்டிக் கோட்டை (.பைலாகா தீவு). கஸ்மா கிணறு இது இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் நன்கு அறியப்பட்ட கிணறுகளில் ஒன்றாகும்.
குவைத் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள தொல்பொருள் சேகரிப்பு மிகப் பெரியது, அவற்றில் முக்கியமானவை முத்திரைகள், நாணயங்கள், மட்பாண்டப் பொருட்கள் மற்றும் சிலைகள். அவற்றில் மிகப் பழமையானது கிமு ஐந்தாம் மில்லினியத்திற்கு முந்தையது என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் சில சமீபத்திய இஸ்லாமிய சகாப்தத்திற்கு முந்தையவை எனவும் அந்த நூல் குறிப்பிடுகிறது.
16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு யானையின் புதை படிவ எலும்பு (மியோசீன் சகாப்தம்) மதீரா, (அல் சுப்பியா) உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
புதிய கற்காலத்தின் பழமையான படகின் மாதிரி இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு கடல் படகின் பழமையான வரைபடத்தைத் தாங்கிய மட்பாண்டத் துண்டு தோராயமாக, கிமு 5000 (கற்காலம்) என குறிப்பிடப்படுகிறது.
வட்ட தில்முன் முத்திரை வெண்கலத்தில் கிடைத்துள்ளது. இதுவும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு அரசரின் சிலை, ஒருவேளை மித்ரிடேட்ஸ் &2 ஆக இருக்கலாம். இதன் வயது கிமு 124 முதல் 91 வரை இருக்கலாம் என குறிப்பிட்டு உள்ளார்கள்.
வெண்கல தவளை சிலை வெண்கல காலகட்டத்தினை சேர்ந்தது. கிடைத்த இடம் தில்முன் டவுன், பைலாகா தீவு.
செப்பு செதுக்கும் கருவி, மான் எலும்பின் கைப்பிடி வெண்கல காலம் அல்-காதர். பைலாகாதீவு
முக அமைப்பு வேலைப்பாடுகளுடன் கூடிய வெண்கலச் செங்கோல் வெண்கல காலம் தில்முன் நகரம், பைலாகா தீவு.
பொறிக்கப்பட்ட மனித பிரதிநிதித்துவத்துடன் அலங்கரிக்கப்பட்ட சில்வர் பாத்திரத்தின் ஒரு துண்டு வெண்கல காலம் (தில்முன் நகரம்) பைலாகா தீவு.
அன்சாக் மற்றும் என்கே ஆகிய கடவுள்களின் பெயர்கள் வெண்கலக் காலத்தைக் குறிப்பிடும் ஏழு வரிகளைக் கொண்ட கியூனிஃபார்ம் கல்வெட்டுகளைத் தாங்கிய ஒரு சில்வர் பாத்திரத்தின் ஒரு துண்டு.
இதுபோன்று புத்தகத்தில் குவைத்தில் கிடைத்த பொருள்கள் குறித்து பதிவிட்டு உள்ளார்கள். அடுத்து அவர்கள் ஹெலனிக் காலம் குறித்து பதிவிட்டுள்ளார்கள்.
ஹெலனிக் காலம் என்பது கி.மு 323 பேரரசர் அலெக்சாண்டர் இறப்புக்கும் கி.பி 31 ரோமை பேரரசு எழுர்ச்சிக்கும் இடையே பண்யை கிரேக்க நாட்டிலும், மத்திய தரைக்கடல் ஒட்டிய பகுதிகளில் வரலாறுகளை கூறும் காலமாகும். மேலும் இந்த காலகட்டத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்கர்களின் பேரரசு ரோமனியர் களால் வீழ்த்தப்பட்டது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் கிரேக்க காலனி ஆதிக்கத்தினை நிறுவப்பட்டதே ஹேலனியக்காலத்தின் சிறப்பு அம்சமாகும். இந்த காலகட்ட சின்னங்கள் குவைத் அரசு அருங்காட்சியத்தில் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
ஒரு கிரேக்கப் பெண்ணின் வடிவம், கி.மு ஆயிரமாண்டு பழமையானது . ஹெலனிக் கால கட்டத்தினை சேர்ந்த இந்த வடிவம் பைலாகா தீவில் ஹெலனிஸ்டிக் கோட்டையில் கிடைத்துள்ளது. அதே காலத்தில் அதே இடத்தில் கிடைத்த ஒரு பெண்ணின் சிலையின் மேல்பகுதியும் இங்குள்ளது.
இதே காலகட்டத்தில் பைலாகா தீவில் கிடைத்த கடினமான, பளபளப்பான களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு விளக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தினை சேர்ந்த கிரேக்கக் கல்வெட்டைத் தாங்கிய இக்காரஸ் கல், செலூசிட் மன்னரிடமிருந்து இக்காரஸ் தீவின் ஆட்சியாளருக்கு அனுப்பப்பட்ட அரச கடிதம். கிமு 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பைலாகா தீவில் ஹெலனிஸ்டிக் கோட்டையில் கிடைத்தது. இந்த கல்வெட்டை தாங்கிய இக்காரஸ் கல் இங்கே காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
ஒரு வெள்ளி டெட்ராட்ராக்ம் நாணயம். கிங் செல்லக்ஸ் மி நிகேட்டர் (கிமு 306-&281)காலத்தியது. ஹெலனிஸ்டிக் காலகட்டத்தின் நான்கு யானைகளால் இழுக்கப்பட்ட தேரில் ஏதீனா தேவியின் உருவம் பொறிக்கபட்டுள்ளது.
கிமு 317 இல் அலெக்சாண்டர் தி கிரேட் இறந்த பிறகு ஒரு வெள்ளி டெட்ராட்ராக்ம் நாணயம் அச்சிடப்பட்டது, ஹெர்குலிஸ் ஹெல்மெட் ஹெலனிஸ்டிக் காலகட்டத்தை அணிந்திருந்த ஒரு படத்தைத் தாங்கியிருந்தது. இந்த சின்னங்களை நாம் குவைத் அரசு அருங்காட்சியகத்தில் கண்டு கழிக்கலாம்.
இஸ்லாமிய காலம் என்ற தலைப்பிட்டு சில பொருள்கள் இங்கே சேகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பொற்காலம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் அறிவியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார வளர்ச்சியின் ஒரு காலமாகும் , பாரம்பரியமாக 8 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை தேதியிட்டது.
இந்த காலம் பாரம்பரியமாக அப்பாஸிட் கலீப் ஹாருன் அல்-ரஷித் (786 முதல் 809 வரை) ஆட்சியின் போது தொடங்கியது. இது உலகின் மிகப்பெரிய நகரமான பாக்தாத்திற்கு இஸ்லாமிய உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்கள் குவிந்ததைக் கண்டது. அதற்குள், அறியப்பட்ட உலகின் பாரம்பரிய அறிவை அரபு மற்றும் பாரசீக மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். மங்கோலிய படையெடுப்புகள் மற்றும் 1258 இல் பாக்தாத் முற்றுகையின் காரணமாக அப்பாஸிட் கலிபாவின் வீழ்ச்சியுடன் இந்த காலம் முடிவடைந்ததாக கூறப்படுகிறது .
இந்த காலத்தில் கிடைத்த பொருள்களை இந்த அருங்காட்சியத்தில் பட்டியலிட்டுள்ளார்கள்.
இங்குள்ள ஒரு மட்பாண்ட வடிகால் குழாய் இஸ்லாமியத்திற்கு முந்தைய மற்றும் முற்கால இஸ்லாமிய காலத்தினை சேர்ந்தது. இந்த மட்பாண்ட வடிகால் குழாய் பைலாகா தீவில் அல்குசூர் என்ற இடத்தில் கிடைத்துள்ளது.
இஸ்லாமிய சகாப்தத்தினை சேர்ந்த உமையாத் கலிஃபா ஹிஷாம் பின் அப்துல் மாலிக் (கி.பி. 740) காலத்தைச் சேர்ந்த உமையாத் செப்பு நாணயம். இந்த நாணயம் கிடைத்த இடம் – கஸ்மா.
இதே காலத்தில் பைலாகா தீவில் கிடைத்த டர்க்கைஸ் நிற மட்பாண்ட ஜாடியையும் இங்கே பட்டியலிட்டு இருக்கிறார்கள். அதை நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
அப்பாஸிட் கலிஃபா அபு ஜாபர் அல்-மன்சூர் (773 கி.பி) ஆட்சியின் போது அச்சிடப்பட்ட அப்பாஸிட் செப்பு நாணயமும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது கிடைத்த இடம் அக்காஸ்.
இதே போல் பழம் பெருமையை பறைசாற்றும் மிக அதிகமானபொருள்கள்குவைத்தில் கிடைத்துள்ளது. அதையெல்லாம் இங்கே லட்சக்கணக்கணக்கில் காட்சி படுத்தியுள்ளார்கள்.
அதை காணத்தான் நாம் அருங்காட்சியகத்துக்குள் நுழைகிறோம். ஆனால் அருங்காட்சியகம் மூடும் நேரத்துக்கு இதையெல்லாம் கண்டு களியுங்கள் என ஊழியர்கள் கூற நாங்கள் பரபரப்பாக அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தோம்.
(குவைத் பயணம் தொடரும்)


