முன்னீர் பள்ளத்தினை பார்த்துக் கொண்டிருக்கும் போதே என்னோடு வந்த பட்டிமன்ற பேச்சாளர் புத்தனேரி செல்லப்பா அய்யா மேலப்பாளையம் எல்.கே.எஸ் அவர்களோடு பேசினார். அவரிடம் மேலப்பாளையத்தில் முஸ்லிம் தெரு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளதே அதை பற்றி நமது எழுத்தாளர் நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடரில் எழுத வைப்போமா? என கேட்டார்.
சரி என்று ஒத்துக்கொண்ட அவர், என்னை பார்க்க ஒரு நாள் வாருங்கள் என அனுமதியும் கொடுத்தார். இந்த வேளையில் தான் விநாயகர் சதுர்த்தி வந்தது, தொடர்ந்து மிலாது நபியும் வந்தது . இந்த காலகட்டத்தில் எல்.கே. எஸ் மீரான் மைதீன் அய்யா தனது முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் மேலப்பாளையம் முஸ்லீம் தெருவில் உள்ள பிள்ளையார் குறித்து எழுதியிருந்தார். அவர் அனுமதியோடு இந்த தொடரில் அந்த கட்டுரையை பதிவேற்றம் செய்கிறோம்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஊரில், முஸ்லிம் பெருமக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள்.
சரியாக ஊரின் மேற்குப் பகுதியில் குறிப்பிட்ட அந்த இடத்தில்.கிழக்கும். மேற்கும். வடக்கும்.முழுக்க முஸ்லிம்கள் வாழும் பகுதி.
தெற்குப் பகுதியில் ஊரை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற பாளையங்கால் வாயின் நீரோட்டம்.
அதற்கு அப்பால் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வயக்காடுகள் உள்ளன. அவற்றையெல்லாம் தாண்டித்தான். சகோதர ஹிந்துப் பெருமக்கள் வாழ்கிறார்கள்.
கிழக்கே உள்ள தெருவில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பெருமக்கள் அக்ரகாரமாக வீதி அமைத்து, வீடுகள் கட்டி வாழ்ந்திருந்தார்கள்.
சரியாக 1885 ஆம் ஆண்டு கிழக்கு தெருவை நான்கு முஸ்லிம் பெரியோர்களிடம் , பிராமணர் தெரு ஸ்ரீ சுப்பையர் என்கிற பெரிய வர் கிரையத்திற்கு எழுதிக் கொடுக்கிறார். அங்கிருந்தவர்கள் மேலப்பாளையம் குறிச்சிக்கு வடபுறம் பாளையங்கால் வாய்க்கு அருகில் புதிதாக அக்கிரகாரம் அமைத்து குடியேறி விட்டார்கள்.
பழைய அக்ரகாரம் தெருவை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்ய கையெழுத்து போடுவதற்கு முன்பாக, அந்தத் தெருவை வாங்கிய நான்கு முஸ்லிம் பெரியவர்களிடம் ஒரு வாக்குறுதியை கேட்டார்கள்.
நாங்கள் இங்கே உள்ள தெருவை உங்களிடத்திலே விற்பனை செய்யப் போகிறோம் .
எங்களால் வழிபாடு நடத்திவரப்பட்ட பிள்ளையார் கோயிலை இங்கே விட்டுச் செல்கிறோம்.
அந்தக் கோயிலுக்கு எந்த வகையிலும் குறைபாடு , மரியாதைக் குறைவு, கண்ணியக் குறைவு வந்துவிடக்கூடாது .
சத்தியம் செய்து தாருங்கள் என்று கேட்டபோது நான்கு முஸ்லிம் பெரியவர்கள் நாங்கள் கொஞ்சம் கலந்து விட்டு சொல்லுகிறோம் என்று அந்த பெரிய ஐயரிடம் சொன்னார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து அந்த நான்கு பெரியவர்களும் ஒன்றாக வந்து ஸ்ரீ சுப்பையர் என்கிற அந்தப் பெரியவரிடம் நாங்கள் வாழ்கின்ற காலம் வரையில் கோயிலுக்கு எந்தவிதமான சிறிய கண்ணியக் குறைவு கூட வந்து விடாத அளவிற்கு கண்ணும் கருத்துமாக இருப்போம் .
எங்களைப் போலவே எங்களுடைய சந்ததிகளும் இருப் பார்கள் என்று கூறினார்கள். அதன் பின்னரே ரிஜிஸ்ட்ரேஷன் நடை பெற்றது.
அன்றைய காலத்துப் பாட்டிகள் பெரும்பாலும் வெற்றிலை பாக்கு போட்டு குதப்பி கொண்டு இருப்பார்கள் .
வாய் நிறைய வைத்துள்ள வெற்றிலை பாக்கு எச்சிலை தவறியும், கோவில் திசை இருக்கும் திசை நோக்கி துப்பி விட மாட்டார்கள்.
இரவு நேரங்களில் வீடுகளின் திண்ணைகளில் அல்லது மண் சாலைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பெண்மக்கள், மறந்தும் அந்த திசை நோக்கி கால் நீட்டிக் கூட இருக்க மாட்டார்கள்
சின்னஞ் சிறிய பாலகர்களை அந்த திசை நோக்கி சிறுநீர் கழிப்பதற்கு அனுமதிக்க மாட் டார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக் கோயிலை குறைத்து சொல்வதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டார்கள்.
இவை அனைத்திற்கும் தெருவை வாங்கும் காலத்தில் நான்கு முஸ்லிம் குடும்பப் பெரியவர்கள் செய்து கொடுத்த உறுதிப்பிரமாணம் தான் முன் நின்று வழி நடத்தியது.
பிராமணப் பெரியவர் எழுதிக் கொடுத்த பழைய அக்ரகாரத் தெரு, திருநெல்வேலி மாவட்டம், மேலப் பாளையம். தற்போது நாங்கள் குடி இருக்கிற புகாரி தங்கள் தைக்கா தெரு ஆகும்.
எங்கள் தெருவின் பழைய பெயர் உச்சிலி லெப்பைத் தெரு .
இன்றும் என்னுடைய பெயரை குறிப்பிட்டு ஐயர் தெரு மேலப் பாளையம் என்று 137 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பெயரைப் போட்டால் கூட கடிதங்கள் வந்து என்னிடம் சேர்ந்து விடும்.
எங்கள் ஊரில் உள்ள திருமண அழைப்புகள் அய்யர் தெரு என்று போட்டே பாதிக்கும் மேற்பட்டவை அழைப்பிதழ் அடித்து வருகின்றன.
அதனைப் பார்த்து நாங்கள் யாரும் வருத்தப்படுவதில்லை .
பக்கத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு இங்கிருந்து தான் பால் குடங்கள் எடுத்துச் செல்கிறார்கள்.
சகோதர இந்து குடும்பங்களில் எவராவது இறந்துவிட்டால், அந்தக் கோயில் வாசலுக்கு முன்பாக உள்ள படித்துறையில் நின்று கொண்டு தான் நீர் மாலை எடுத்துச் செல்லும் நிகழ்வுகளும் வைத்துள்ளார்கள்.
தற்போதும் அங்கே கோயிலிலே தினமும் பூசை புனஸ்காரங்கள் நடக்கின்றன. வருடத்தில் ஒரு நாள் விநாயகர் சதுர்த்தி நடைபெறுகின்றது. பக்கத்திலே இரண்டு பள்ளிவாசலும், ஒரு தர்காவும் உள்ளன .
பள்ளிவாசலில் பாங்கொலி ஒலிக்கும் போது பிள்ளையார் கோவிலில் ஓடுகின்ற இசைத்தட்டை நிறுத்தி விடுவார்கள்.
மத்தளம் ஓசையை கொஞ்ச நேரத்துக்கு ஒத்தி வைத்து விடுவார்கள்.
ஒரு காலத்தில் நெசவுத்தொழில் செழித்து இருந்த போது எங்கள் தெருவின் நூல் பாவுகள் பிள்ளையார் கோயிலின் மதில் சுவரில் ஒட்டி இருந்த கப்பிகளிலே இணைத்து கட்டப்பட்டிருக்கும்.
இன்றும் எங்களுடைய தந்தையின் தாத்தா மற்றும் மூவர் செய்து கொடுத்த அந்த சத்தியப் பிரமாணம் அப்படியே வழி வழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எங்கள் தெரு கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஒரு காலத்தில் முஸ்லிம் பெருமக்கள் மாலை நேரங்களில் அந்த கோவில் வாசலில் அமர்ந்து கொண்டு தான் ஊர் உலகத்துக் கதைகள் எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள் .
இன்று சின்னஞ்சிறிய பிள்ளைகள் கோவில் வாசல் முன்பாக நின்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கோயில் முன்பாக அரசுக் கட்டிடங்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி முதலானவைகள் கட்டப்பட வரும்போது, எங்களுடைய தந்தையார் காலத்து, எங்கள் தெருவின் பெருமக்கள் கோவில் வாசலில் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரிய வேண்டும். ஆகவே கோவிலை மறைத்து எந்தக் கட்டிடமும் கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி வைத்தார்கள். அதுவே இன்றும் தொடர்கிறது.
இந்த அளவுக்கு சமூக ஒற்றுமைக்கு பெயர் பெற்ற பிள்ளையார் தாமிரபரணி ஆற்றங்கரையில் மேலப்பாளையத்தில் உள்ளார் என்றால் நமக்கெல்லாம் பெருமைதானே.
(நதி வற்றாமல் ஓடும்)


