திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை வழித்தடத்திற்கு 2 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இயக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 புதிய பேருந்துகளின் சேவையை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் தலைமையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இயக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக தூத்துக்குடி மண்டலத்தில் 07 பணிமனைகள் மூலமாக 286 பேருந்துகள் இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. இதில் நாளொன்றுக்கு 183 புறநகர் பேருந்துகள், 103 நகர்ப்புற பேருந்துகள் மூலமாக 1,48,000 கி.மீ இயக்கப்பட்டு சுமார் 3,97,342 பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிதாக 34 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 32 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றையதினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 புதிய பேருந்துகளின் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகளானது, திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை வழித்தடத்திற்கு காலை 7.50 மணிக்கு ஒரு பேருந்தும், காலை 10.30 மணிக்கு மற்றொரு பேருந்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் ர.சிவஆனந்தி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முஹம்மது ஆலிம், திருச்செந்தூர் நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் பி.பாலசுப்பிரமணியன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் கண்மணி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், கிளைமேலாளர் ராஜசேகரன், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.


