
நமது திருநெல்வேலிச் சீமை பல்லாயிரம் ஆண்டு வரலாற்று பாரம்பரியம் மிக்கது. சமீபத்தில் நடந்த ஆதிச்சநல்லூர் அகலராய்ச்சியின் தரவுகளின் படி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நாகரீகம் கொண்டது என அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு நம் நெல்லைச் சீமையில் இருந்து எழுதப்பட வேண்டியது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1792 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் நமது நெல்லை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அந்த நாளே நெல்லை தினமாக கொண்டாடப் பட வேண்டும் என 2020 ஆம் ஆண்டு சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத்தின் பொதுக் குழுவில் முதன்முதலாக தீர்மானிக்கப்பட்டது .
அதன்படி 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாளில் திருநெல்வேலி அருங்காட்சியத்துடன் இணைந்து “வரலாற்றில் நெல்லை” என்ற தலைப்பில் நெல்லை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2022 ஆம் ஆண்டு சென்னை போர்ட் க்ளப்பில் வைத்து நெல்லை தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது . அதில் நெல்லை மண்ணின் அறிஞர்கள் ஐயா நல்லக்கண்ணு, டாக்டர். விஜி. சந்தோஷம் , திரு. பாலம் கல்யாணசுந்தரம் , இஸ்ரோ விஞ்ஞானி திரு. நெல்லை சு. முத்து ஆகியோருக்கு நெல்லை ரத்னா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
2023 ஆம் ஆண்டு நெல்லை தினம் சென்னை தரமணியில் நடைபெற்றது. அதி்ல் டெக்டான் குழுமத் தலைவர் திரு. லெட்சுமணன் , சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. வண்ணதாசன் , மேனாள் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மேஜர் ராஜா, மும்பை தொழிலதிபர் திரு. முத்து , வரலாற்று ஆய்வாளர் திரு. முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோருக்கு நெல்லை ரத்னா விருதுகளும் , வளர்ந்து வரும் பல்துறை சாதனையாளர்களுக்கு நெல்லை நட்சத்திரம் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு நெல்லை தினம் வெகு விரைவில் சென்னையில் சிறப்பாக கொண்டாடப் பட இருக்கிறது .
தற்போது அனைவராலும் நெல்லை தினம் , திருநெல்வேலி தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி் அளிக்கிறது.
சாதி ,மத பேதமற்ற ஒன்றுபட்ட நெல்லை மக்களாக நாம் அனைவரும் விளங்கி வாழ்வில் பல சாதனைகள் படைத்து பரணி பாயும் நெல்லை மண்ணின் பெருமைகளை என்றென்றும் கட்டிக்காப்போம்!
அனைவருக்கும் இனிய நெல்லை தின நல்வாழ்த்துகள் !