தூத்துக்குடி வட்டக்கோவில் சிஎஸ்ஐ ஆலயத்தில் சேகரத் தலைவரை மாற்றக் கோரி சபை மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி வட்டக்கோவில் சிஎஸ்ஐ டிஎன்டி எபனேசர் ஆலயத்தில் சபை மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “சேகரத் தலைவர் ஜெபக்குமார் ஜாலி, சபை நிர்வாகத்தினை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது, சபை மக்களை மதிக்காமல் இணக்கமின்றி நடப்பது, சபை மக்களிடம் பிரிவினைகளை உண்டுபண்ணுவது, சபையில் தனி மனித துதி பாடுவது,
சுய லாபத்திற்காக சபையில் அரசியல் குழப்பத்தை உண்டாக்குவது, கமிட்டியாரை செருப்பால் அடிப்பேன் என கூறி செருப்பை எடுத்துக் காட்டி மிரட்டுவது, போன்ற அராஜகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அவரை ஆலயத்திலிருந்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று திருமண்டல நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
இப்போராட்டம் நேற்று மாலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சபை பிரமுகர்கள் எஸ்டிகே ராஜன், ஜெபசந்திரன், இரா.ஹென்றி, வட்டக்கோவில் ஜான்சன், ஜெபர்சன், விஜயன், நாசரேத் மாமன்னன், சந்த்ரு, தேவராஜ், கோவில்பிச்சை, அருள் உட்பட சபை மக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.


