பால கங்காதர திலகர் 23 சூலை 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் “தேசியவாதியும்”, “சமூக சீர்திருத்தவாதியும்”, விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான “லோகமான்ய” என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.
திலகரின் சீடரான வ. உ. சிதம்பரம் பிள்ளை “தென்னாட்டுத் திலகர்” என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ அரவிந்தர் இந்திய மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். பால கங்காதர திலகர் தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிறப்பும் கல்வியும் திலகர் 1856-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் நாள் மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் பிறந்தார். தந்தையார் கங்காதர் ராமசந்திர திலக் சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற ஆசிரியர். தாயார் பார்வதிபாய்
அவரது பத்து வயது வரை ரத்தினகிரியில் படித்தார். பின்னர் அவரது தந்தை பணி காரணமாக புனேவுக்கு இடம் பெயர்ந்ததால் அங்கே கல்வியைத்தொடர்ந்தார். அவர் சுமார் பத்து வயதாக இருக்கும் போதே தாயை இழந்தார். அவருக்கு கேசவ் கங்காதர திலக் என்றே பெயரிட்டனர். அவரது தாயார் அவரை பால் என்று அழைத்தார். தாயார் நினைவாகவே திலகர் தனது பெயரை பால் கங்காதர திலக் என்று வைத்துக்கொண்டார். 1871-ல் சத்தியபாமா 11 வயது சிறுமியை திலகருக்கு மணம் முடித்தனர். 1877- ஆம் ஆண்டில் புனேவில் உள்ள டெக்கன் கல்லூரியில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றார். அப்போது அவரது தந்தையாரும் இறந்துவிட்டார். அவரது சித்தப்பா கோவிந்த ராவும் சித்தி கோபிகா பாயும் மிக அன்புடன் அவரை வளர்த்தனர். 1879-ல் சட்டப்படிப்பை முடித்தார். இவர் பெர்கூசன் கல்லூரியில் கணிதமும் கற்பித்து வந்தார்.
பாலகங்காதர திலகர் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற, கணிதப் பாடத்தில் மிகச் சிறப்பாக முதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன். அவன் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில விண்ணப்பித்தான். அவனுடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும் பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுவும், ” அன்பு மாணவனே! நீ கணிதத்தில் மிகவும் திறமை பெற்றிருப்பது தெரிகின்றது. நீ கணிதப் பிரிவில் சேர்ந்து கணிதத்தையே சிறப்புப் பாடமாகக் கற்பாயாகில், நீ மிகவும் மேலாம் நிலையினை அடைவாய். அதன் மூலம் உனக்கு ஒளிமிகுந்த எதிர் காலம் அமையும். அதற்கு மாறாக நீ சட்டம் படிப்பாயானால் நீ அடையும் பயன் குறைவாகவே இருக்கும். நீ யோசித்து உன்முடிவைச் சொல்” என்று அவனுக்கு விளக்கிக்கூறினர். அதற்கு மாணவன் பணிவோடு” ஐயன்மீர்! தாங்கள் கூறிய அனைத்தும் சரிதான். ஆனால், என் நாடு அடிமைப்பட்டுக் துன்புற்றுக் கிடக்கின்றது. சுதந்திர தாகத்தால் தவிக்கும் என் மக்கள் அன்னிய ஆதிக்கத்தால் சட்டமல்லாத சட்டத்தின் கீழ் அடிக்கடி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை விடுவிக்கத் தக்கவர்களான தேச பக்தி மிகுந்த வழக்குறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. என் மக்களையும், தேசத்தையும் காப்பாற்றவேண்டுமானால் நான் சட்ட நுணுக்கங்களையெல்லாம் கற்ற சட்ட நிபுணனாக வேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகவே நான் சட்டம் பயில வந்தேன். அதற்கு, பெரியீர் தாங்கள் தாம் என்மீது அன்பும், கருணையும் கொண்டு உதவிகளைச் செய்யவேண்டும்.”என்று பணிவுடன் கூறினான். அவன் கொண்ட வைராக்கியத்தின்படியே சட்ட வல்லுனனாகிப் பல தேச பக்தர்களுக்காக வாதாடி அவர்களைச் சிறையிலிருந்து மீட்டான். தன் நாட்டு மக்கள் மனத்தில் சுதந்திரக் கனலை மூண்டெரியச் செய்தான்
மகாதேவ் கோவிந்த் ரானடே என்பவர் ஆரம்பித்த சர்வஜனிக் சபாவில் சேர்ந்து பொதுத் தொண்டாற்றினார். தாதாபாய் நௌரோஜி இந்திய செல்வம் எப்படி ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுகிறது என்று புள்ளி விவரத்துடன் எழுதிய நூலை அடிப்படையாக வைத்து ரானடே 1872-ல் ஆற்றிய சொற்பொழிவும் விஷ்ணு சாஸ்திரி சிப்லுண்கர்1874-ல் நிபந்த மாலை என்ற பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளும் சுய நலமற்ற பண்புடைய திலகரை ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் தூண்டியது.
திலகர், கோபால் கணேசு அகர்கர், விட்ணுசாத்திரி சிப்லுனாக்கர், இன்னும் பிற நண்பர்களுடன் சேர்ந்து 1881 ஆம் ஆண்டில் இரண்டு பத்திரிகைகளைத் தொடக்கினார். ஒன்று “கேசரி” என்னும் பெயர் கொண்ட மராத்தி மொழிப் பத்திரிகை, மற்றது “மராட்டா” என்ற ஆங்கிலப் பத்திரிகை. இரண்டு ஆண்டுகளிலேயே “கேசரி” இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கொண்ட பத்திரிகை ஆனது. இதன் ஆசிரியத் தலையங்கங்கள் பிரித்தானியர்களின் கீழ் மக்கள்படும் துன்பங்கள் குறித்ததாகவே இருந்தன. இந்தப் பத்திரிகைகள், ஒவ்வொரு இந்தியனையும் தமது உரிமைகளுக்காகப் போராடும்படி தூண்டின. அதன் தலையங்கங்கள் மக்களின் சிரமங்களையும் உண்மையில் நடப்பதையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்ததால் மக்கள் அந்த பத்திரிக்கைகளை விரும்பிப்படித்தனர்.
மேலும் அவர்கள் மக்களுக்கு இந்திய கலாச்சாரத்துடன் சேர்ந்த கல்வியறிவை கொடுப்பதற்காக 1884-ல் தக்காண கல்வி சபையைத் தோற்றுவித்தனர். கடுமையாக உழைத்து திறமையாக நடத்தினர். அது பின்னர் ஃபெர்குஸன் கல்லூரியாகவும் விரிவடைந்தது.
சுவாமி விவேகானந்தர் இந்தியாவை சுற்றி வந்த பரிவ்ராஜக வாழ்க்கையின் போது, மும்பையில் இருந்து புனேவிற்கு செப்டம்பர் 1892 இல் ரயிலில் வந்தார். அப்போது பால கங்காதர திலகர் அவரது சக பிரயாணியாவார். பின்னர் திலகரின் இல்லத்தில் 8 லிருந்து 10 நாட்கள் வரை சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார்.அந்த அறை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.பின்னாளில், இதே அறையில்தான் புகழ்பெற்ற விநாயகர் திருவிழாவையும் திலகர் ஆரம்பித்தார்.


