கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் இரு பக்கங்களிலும் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடைகளை அமைத்து அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆறாம் பண்ணை,கொங்கராயகுறிச்சி, கருங்குளம் சுற்றுவட்டார ஊர்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டதால் கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை, நடுவக்குறிச்சி,ஆழ்வார் கற்குளம் போன்ற கிராமத்தில் உள்ள மக்கள் செய்துங்கநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தந்திஅலுவலகம் மற்றும் திருநெல்வேலி செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் கருங்குளத்தில் வந்து தனது இருசக்கர வாகனங்களை பார்க்கிங்கில் விட்டுவிட்டு ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் திருநெல்வேலி செல்ல இப்பகுதி மக்களுக்கு வசதியாக இந்த பாலம் அமைந்துள்ளது.
ஆனால் கருங்குளத்தில் இருந்து ஆற்றுப்பாலத்தின் இரு பக்கங்களிலும் வளமான வேகத்தடைகள் அமைக்க வேண்டும், ஏனெனில் கொங்கராயகுறிச்சி ஆறாம்பண்ணை பிரிவு சாலை உள்ளது, அதன் அருகில் கொங்கராயகுறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியும் உள்ளது, இந்த பள்ளிக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்,
வந்து செல்கின்றனர், எனவே பாலத்தின் அருகே வேகத்தடை இல்லாத காரணத்தினால் இருசக்கர வாகனத்தில் வருகிறவர்கள் மற்றும் பெரிய வாகனங்கள் அதிவேகமாக வந்து பாலத்தில் திரும்புவதால் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.
எனவே பாலத்தின் இரு பக்கங்களிலும் வேகத்தடை அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
அதிகாரிகள் கூறும் பதில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் அந்த பணி முடிந்தவுடன் வேகத்தடை அமைக்கப்படும் என்கிறார்கள்,இதற்கு தற்காலிகமாக இப்பொழுது வேகத்தைடை அமைத்துவிட்டு சாலை பணி முடிந்தவுடன் நிரந்தரமாக வேறு வேகத்தடை அமைக்கலாம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தப் பாலத்தின் அருகில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, நேற்று முன்தினம் கருங்குளம் ஆற்றுப்பாலத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் மீது லோடு ஆட்டோ மோதி மெக்கானிக் பலியானார்.
மேலும் இதுபோன்று விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க விரைவில் வேகத்தடைகள் பலமாக அமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஐந்து கிராமத்தில் உள்ள மக்கள் இந்த பாலத்தில் பயணித்து வருவதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குற்ற சம்பவங்கள் பாலத்தில் நடைபெறாமல் இருக்கவும், நடைபெற்றால் அதனை உடனடியாக காவல்துறைக்கு கண்டுபிடிக்க எளிதான வகையில் இருப்பதற்காகவும், பாலத்தில் இரு பக்கங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், என்று கருங்குளம் சுற்று வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


